சத்தீஸ்கர் | தசரா நிகழ்வில் ராவணன் பொம்மையின் 10 தலைகள் எரியாததால் க்ளார்க் பணியிடை நீக்கம்

உடல் முழுவதும் எரிந்து தலைகள் எரியாமல் இருக்கும் ராவணனின் உருவ பொம்மை | படம்: ட்விட்டர்
உடல் முழுவதும் எரிந்து தலைகள் எரியாமல் இருக்கும் ராவணனின் உருவ பொம்மை | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

ராய்பூர்: சத்தீஸ்கரில் தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த ராவணனின் உருவபொம்மை எரிப்பு நிகழ்வில் பத்து தலைகள் மட்டும் எரியாமல் போனது தொடர்பாக ஊழியர் ஒருவரை தம்தாரி மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு 4 அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

நாடெங்கும் இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் துர்கா பூஜையின் இறுதி நிகழ்வாக "தசரா" அல்லது "விஜயதசமி" விழா கருதப்படுகிறது. இந்தநிகழ்வின் போது, தீமையை நன்மை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராவணனின் உருவ பொம்மை நாடு முழுவதும் எரிக்கப்படுகின்றன.

இந்தாண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தசரா விழாவில் ராவணனின் 10 தலைகளும் எரியாததால் மாநகராட்சி ஊழியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தம்தரி மாவட்ட மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் போது ராவணனின் முழு உருவமும் எரிந்த நிலையில் பத்து தலைகளும் எரியாமல் அப்படியே இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தசரா கொண்டாட்டம் முடிவடைந்த பின்னர், ராவணன் உருவ பொம்மையை செய்வதில் அலட்சியம் காட்டிருப்பதாக கூறி க்ளார்க் ராஜேந்திர யாதவ் என்பவரை தம்தரி முனிசிபல் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து வழங்கப்பட்டுள்ள உத்தரவில், கிரேடு-3 உதவியாளர் ராஜேந்திர யாதவ், 2022ம் ஆண்டு நடந்த தசரா கொண்டாட்டத்தின் போது உருவாக்கப்பட்ட ராவணன் உருவ பொம்மையில் தம்தரி முனிசிபல் கார்பரேஷனின் மதிப்பை கெடுக்கும் வகையில் அலட்சியம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக, "துணைப்பொறியாளர் விஜய் மெஹ்ரா, உதவி பொறியாளர்யாளகள் லோமாஸ் தேவாங்கன், கமலேஷ் தாகூர், காம்டா நாகேந்ரா ஆகிய நான்கு பேரிடம் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தம்தரி நகராட்சி நிர்வாகத்தின் செயற்பொறியாளர் ராஜேஸ் பதம்வார் தெரிவித்துள்ளார்.

தம்தர நகர மேயர் விஜய் தேவாங்கன் கூறுகையில்," ராவணனின் உருவபொம்மை செய்தவர்களுக்கு பொறுப்பேற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பணிக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

மாநகராட்சி ஊழியர்கள் கூறும்போது, " தசரா விழாவிற்காக ராவணனின் உருவபொம்மையில் 10 தலைகள் மட்டும் எரியாமல் இருப்பது சிலை சரியாக உருவாக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in