

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால் நதியில் புதன்கிழமை துர்கா தேவி சிலைகளைக் கரைக்கும் போது ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி சுமாார் 8 பேர் பலியாகினர். பலர் காணாமல் போயிருப்ப்தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட மாடவட்டங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த துர்கா பூஜை புதன்கிழமை நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து துர்கா தேவி சிலைகள் நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன.
மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள மால் நதியில் துர்கா தேவி சிலைகளைக் கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூழ்கி நான்கு பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணாமல் போயிருக்கின்றனர்.
இந்தவிபத்து குறித்து மாவட்ட நீதிபதி மவுமிதா கோடரா கூறுகையில், துர்கா தேவி சிலைகளை கரைப்பதற்காக நேற்று மாலையில் நூற்றுக்கணக்கானோர் நதிகரைகளில் கூடியுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சின்னசின்ன காயங்களுடன் மீட்கப்பட்ட 13 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகள், உள்ளூர் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், மால் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவுமான புலு சிக் பராய்க், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என கவலை தெரிவித்துள்ள அமைச்சர் விபத்துக்குறித்து கூறும்போது, "அந்த துயரச்சம்பவம் நடக்கும் போது நான் அங்கு தான் இருந்தேன்.அப்போது அங்கு நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். நீரோட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. பலர் காணாமல் போயிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
விபத்துகுறித்து பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து கேள்விப்பட்டு பிரதமர் மிகவும் வேதனை அடைந்ததாகவும், விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கள்களைத் தெரிவித்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநில எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஜல்பைய்குரியில் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்ட விபத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக வேதனையான தகவல்கள் வருகின்றன. சிலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி மற்றும் மாநில நிர்வாகமும் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் ராஜஸ்தானிலும் விபத்து
இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் துர்கா தேவி சிலையை கரைக்கும் போது, ஆக்ரா நதியில் மூழ்கி, 15 வயது சிறுவன், 19 மற்றும் 22 வயதுடைய வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலைவரை நடந்த மீட்புபணிகளில் யாருடைய உடல்களும் மீட்கப்படவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் இதேபோன்ற துயர சம்பவம் நடந்துள்ளது. அங்கு மழைநீர் தேங்கியிருந்த பள்ளம் ஒன்றில் துர்கா தேவி சிலையினை கரைக்கும் போது, நீரில் மூழ்கி ஆறுபேர் உயிரிழந்தனர். ஆறுபேர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. உடற்கூராய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். விபத்து நடந்த பள்ளம் உள்ளூர் மக்களால் அடிக்கடி சிலைகளை கரைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. இறந்தவர்கள் சின்ன பள்ளம் என்று நினைத்து அதில் இறங்கியுள்ளனர். பள்ளம் ஆழமாக இருந்ததால் அதில் மூழ்கி இறந்துள்ளதாக அஜ்மீர் எஸ்.பி. சுனா ராம் ஜாட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.