

பெங்களூருவில் ரூ. 1.37 கோடி ரொக்கப்பணத்துடன் காணாமல் போன ஏடிஎம் வேன் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. வேன் ஓட்டுநரை தேடும் பணியை தனிப்படை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள லிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் டோம்னிக். இவர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வேனின் தனியார் நிறுவனத்தின் ஒட்டுநராகப் பணியாற்றினார். நேற்றுமுன் தினம் கெம்பே கவுடா சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு ரூ.1.37 கோடி பணத்துடன் சென்றார்.
அப்போது பாதுகாவலர்கள் வங்கிக் கிளைக்குள் சென் றிருந்தபோது, தனியாக இருந்த டோம்னிக் பணம் இருந்த வேனை எடுத்துக் கொண்டு தலைமறைவானார். வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் உப்பார்பேட்டை போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசா ரணையை தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக டோம்னிக்கின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.
ஏடிஎம் வேன் பெங்களூரு மாநகரை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு சோதனைகள் கடுமையாக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் கடத்தப்பட்ட வேன் வசந்த நகரில் உள்ள மவுண்ட் கார்மேல் கல்லூரியின் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று சோதித்த போது, வேனில் ரூ.45 லட்சமும் துப்பாக்கியும் மட்டுமே இருந்தன.
மீதமுள்ள 92 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தலைமறைவான ஓட்டுநர் டோம்னிக்கை தேடும் பணியை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். ஓட்டுநரிடம் உள்ள 92 லட்ச ரூபாயும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என்பதால் அதில் உள்ள வரிசை எண்களைக் கொண்டு, அதனை கண்டுபிடித்துவிட முடியும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.