

போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 8 சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.பாண்டே தலைமையில் நீதி விசாரணை நடத்த மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சிமி தீவிரவாதி களில் 8 பேர் கடந்த திங்கள் கிழமை அன்று அதிகாலை சிறை தலைமை காவலர் ராம்சங்கர் யாதவை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். உடனடியாக அவர்களை பின்தொடர்ந்த தனிப்படையினர், போபால் புறநகர் பகுதியில், இந்த்கேதி கிராமம் அருகே மலை உச்சியில் சுற்றிவளைத்து என்கவுன்ட்டர் மூலம் கொன்றனர்.
போலீஸாரின் இந்நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. முன்கூட்டியே திட்டமிட்டு, போலியாக இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாக தீவிரவாதிகளின் உறவினர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வெளியான ஒலிநாடா
இந்நிலையில் அந்தக் குற்றச்சாட்டுக் களுக்கு வலுசேர்க்கும் வகையில் என்கவுன்ட்டர் நடந்த அன்று களத்தில் இருந்த போலீஸாருக்கும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர் களுக்கும் இடையே நடந்த உடையாடல்கள் தொடர்பான ஒலிநாடா வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘‘கைதிகள் அனைவரையும் முடித்து விடுங்கள். அவர்களை கைது செய்ய முயற்சிக்க வேண்டாம்’’ என ஒரு குரல் உத்தர விடுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து, ‘‘கைதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நிறுத்தப்பட்டது’’ என சில குரல்கள் ஒலிக்கின்றன.
ஏற்கெனவே சிமி தீவிரவாதிகளுக்கு மிக அருகில் நின்றபடி போலீஸார் துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தநிலையில், தற்போது ஒலிநாடாவும் வெளியாகி இருப்பது, இந்த விவகாரத்தில் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. அதே சமயம் இந்த ஒலிநாடா போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் நடந்த நிகழ்வின்போது தான் பதிவு செய்யப்பட்டதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
சிவராஜ் சிங் உத்தரவு
இதற்கிடையே, இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் நேற்று உத்தரவிட்டார். அதன்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.பாண்டே தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்தியப் பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘‘பலத்த பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலையில் இருந்து சிமி தீவிரவாதிகள் எப்படி தப்பிச் சென்றனர், என்கவுன்ட்டர் எந்த வகையில் நடத்தப்பட்டது உள்பட இந்த விவகாரம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நீதிபதி பாண்டே விசாரிப்பார்’’ என குறிப்பிடப்பட் டுள்ளது.
விசாரணை முடிந்த பின் சிறைச் சாலையின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து நீதிபதி பாண்டே அரசுக்கு பரிந்துரைப்பார் என மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நேற்று கருத்து தெரிவித்த பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி, ‘‘இந்த என்கவுன்ட்டர் விவகாரத்தில் விசாரணை தேவையில்லை. இருந்தாலும் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது என்பதற்காகவே முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.
விஐபி பாதுகாப்புக்கு 80 சிறைக் காவலர்கள்
சிமி தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்பிச் சென்றபோது சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 80 காவலர்கள் விஐபிகளின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், சிறைத் துறை அமைச்சர் குஷும் மெஹ்தெலே, முன்னாள் சிறைத் துறை அமைச்சர்கள், சிறை உயரதிகாரிகள் உள்ளிட்ட விஐபிக்களின் வீடுகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பலவீனமான பாதுகாப்பு ஏற்பாடுகளை பயன்படுத்திக் கொண்ட 8 சிமி தீவிரவாதிகளும், பல் துலக்கும் பிரஷ் மூலம் சிறை அறையின் கதவுகளை திறந்து தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.