

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன்கொண்ட, பிருத்வி-2 ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தில் நேற்று வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட பிருத்வி-2 ஏவுகணை, 2003-ம் ஆண்டில் ராணுவத்தில் இணைக்கப்பட்டது. இந்திய ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, அவ்வப்போது திறன் மேம்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை யின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை ஒடிசா கடலோரப் பகுதியில் ராணுவம் நேற்று சோதனைக்கு உட்படுத்தியது.
அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் சோதித்துப் பார்க்கப்பட்டன. இவை, 500 முதல் 1,000 கிலோ வரையிலான எடை கொண்ட வெடிப்பொருட்களைச் சுமந்து, 350 கிமீ தொலைவு வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டவை.
ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தின் 3-வது வளாகத்தில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலம் இந்த ஏவுகணைகள் நேற்று காலை 9.35 மணிக்கு அடுத்தடுத்து செலுத்தப்பட்டன. சோதனை நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோன்ற 2 முறை ஏவுகணை சோதனை, 2009-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.