

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகேயுள்ள குர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் மைக்கேல் டி'குன்ஹா. கடந்த 2013-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.
இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உட்பட நான்கு பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இறுதி தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து நீதிபதி குன்ஹா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தடுப்பு அதிகாரியாகவும், கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதிகளுக்கான பணி இடங்களை நிரப்பக்கோரி தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதிக்கும், குடியரசுத் தலைவருக் கும், குன்ஹா உட்பட 5 பேர் பட்டியலைப் பரிந்துரைத்தார்.
இந்தப் பட்டியலை பரிசீலித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உட்பட 5 பேரையும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து உத்தரவிட்டார். அதன்படி 5 நீதி பதிகளும் விரைவில் பொறுப் பேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.