

இரு தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் ஜம்மு பிராந்தியத்தை நேற்று உலுக்கின. இவற்றில் ராணுவ மேஜர் உட்பட 7 வீரர்களும் 6 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். பிஎஸ்எப் டிஐஜி உட்பட பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு நகர் தேசிய நெடுஞ்சாலையில், ஜம்முவில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் நக்ரோட்டா என்ற இடத்தில் ராணுவத்தின் 16-வது படைப்பிரிவு தலைமையகம் உள்ளது.
இதன் அருகில் உள்ள ராணுவ முகாமுக்குள் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தற் கொலைப் படை தீவிரவாதி சிலர் போலீஸ் சீருடையில் நுழைந்தனர். கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கியுடன் நுழைந்த இவர்கள் அங்குள்ள உணவக கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
உடனே சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் இரண்டு பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் 12 வீரர்கள், தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக சிக்கினர். இந்நிலையில் சுமார் 4 மணி நேரம் நீடித்த கடும் மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். இந்த மோதல் சம்பவத்தில் ராணுவத் தரப்பில் 2 அதிகாரிகள் உட்பட 7 வீரர்கள் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து நக்ரோட்டா நகரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததால் இதையொட்டிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இங்குள்ள பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மற்றொரு சம்பவம்
இதனிடையே பாகிஸ்தானுட னான சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று நடந்த மற்றொரு மோதல் சம்பவத்தில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் இருந்து தெற்கே 40 கி.மீ. தொலைவில், சம்பா மாவட்டம், ராம்கார் செக்டார் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இவர்களை பிஎஸ்எப் வீரர்கள் சுற்றிவளைத்ததை தொடர்ந்து இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இறந்த தீவிரவாதி ஒருவரின் உடலை அகற்ற முயன்றபோது, அவரது உடலில் பொருத்தியிருந்த குண்டு வெடித்தது. இதில் துணை ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி பி.எஸ்.கசானா, இன்ஸ்பெக்டர் சரப்ஜித் சிங் உட்பட பிஎஸ்எப் வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் ஜம்மு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அங்கு அவர் களின் உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. எல்லையில் 2 நாட்கள் அமைதி நிலவியதை தொடர்ந்து நேற்று இத்தாக்குதல் நடந் துள்ளது.