Published : 04 Oct 2022 07:35 AM
Last Updated : 04 Oct 2022 07:35 AM

பிரதமருக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஏலம் - ரூ.49 லட்சத்துக்கு கேட்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் சிற்பம்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு வரும் நிலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிற்பம் அதிகபட்சமாக ரூ.49.61 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி விழாக்களில் பங்கேற்ற போதும், முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த போதும் ஏராளமான பரிசுப் பொருட்கள் அவருக்கு வழங்கப்பட்டன. அவ்வாறு நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்ட பொருட்களை ஆன்லைன் வழியாக (மின்னணு ஏலம்) ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி அந்த பரிசு பொருட்கள் அனைத்தும் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்டு, பின்னர் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை மக்கள் நல திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார். 2019 - 2021 ஆண்டுகளில் டர்பன், சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் ரூ.22.5 கோடி ரூபாய் கிடைத்தது.

தற்போது பிரதமர் மோடிக்கு பரிசுப் பொருட்களாக சேர்ந்த 1,200-க்கு மேற்பட்ட பொருட்களின் ஏலம் பிரதமரின் பிறந்தநாளான கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. ஏலத்தேதி நேற்று முன்தினம் முடிவடைய இருந்த நிலையில் ஏலத்தின் கடைசி தேதி வரும் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வந்துள்ள பொருட்களை pmmementos.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம்.
இதனிடையே பிரதமருக்கு வந்த பரிசுப் பொருட்களில் காசி விஸ்வநாதர் கோயில் சிற்பம் அதிகம் பேரை ஈர்த்துள்ளது. இந்தப் பொருளை பலர் ஏலம் கேட்டுள்ளனர். அதிகபட்சமாக இதை ரூ.49.61 லட்சம் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

மரத்தால் மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இந்த சிற்பம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது இந்த சிலையை பிரதமர் மோடிக்கு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார். இந்த சிலையின் அடிப்படை விலையாக ரூ.16,200 நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2022-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற செவித் திறன் குறைந்தோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினர் டி-ஷர்ட்டில் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினர். இந்த டி-ஷர்ட்டும் ரூ.47.69 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. தாமஸ் கோப்பையில் தங்கம் வென்ற பாட்மிண்டன் வீரர் கே.ஸ்ரீகாந்த் வழங்கிய பாட்மிண்டன் ராக்கெட் ரூ.48.2 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு அடிப்படை விலை யாக ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 2022 காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிந்த குத்துச்சண்டை கிளவுஸ்கள் வீரர்கள் கையெழுத்திடப்பட்டு பிரதமருக்கு பரிசாக வழங்கப் பட்டன. இதை 181 பேர் ஏலம் கேட்டுள்ளனர். அதிகபட்சமாக ரூ.44.13 லட்சம் வரை இந்த கிளவுஸ்கள் ஏலம் கேட்கப்பட்டுள்ளன.

மேலும் அமிர்தசரஸ் பொற்கோயில் மாதிரியில் உருவாக்கப்பட்ட சிலையை 100 பேர் வரை ஏலம் கேட்டுள்ளனர். இந்த சிலை அதிகபட்சமாக ரூ.19.70 லட்சம் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளது. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது வழங்கப்பட்ட நினைவுப்பரிசு ரூ.19.65 லட்சத்துக்கும், அயோத்தி ராமர் கோயில் வடிவில் வழங்கப்பட்டுள்ள பரிசு ரூ.6.85 லட்சத்துக்கும், கருப்பு மார்பிள் கல்லால் செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் சிலை ரூ.41.74 லட்சத்துக்கும் ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x