ஆம் ஆத்மிக்கு புதிய சிக்கல்: 27 எம்எல்ஏ.க்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஆம் ஆத்மிக்கு புதிய சிக்கல்: 27 எம்எல்ஏ.க்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Updated on
1 min read

ஆதாயம் தரும் பதவி வகிக்கும் 27 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 27 எம்எல்ஏக்களுக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

டெல்லியில் சட்டப்பேரவை செயலர்களாக 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை கட்சியின் தலைவ ரும், மாநில முதல்வருமான கேஜ்ரிவால் நியமித்திருந்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டத்துக்குப் புறம்பான முறையில் ஆதாயம் தரும் பதவியில் அமர்த்தப்பட்ட 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதேபோல் கடந்த ஜூன் மாதம் ஆதாயம் தரும் பதவி வகிக்கும் 27 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்கு புதிய மனு அளிக்கப் பட்டது. அதில் அந்த 27 பேரும் டெல்லி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நலக்குழுவின் தலைவராக பதவி வகித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனு கடந்த மாதம் குடியரசுத் தலைவர் மாளிகை மூலம் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம், நவம்பர் 11-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி கேட்டு 27 எம்எல்ஏக்களுக்கும் நேற்று நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே 21 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி வாதம் நவம்பர் 15-ம் தேதி நடக்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தப் பட்டிய லில் டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், துணை சபாநாயகர் ராக்கி பிர்லா, முன்னாள் துணை சபாநாயகர் பந்தனா குமாரி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in