

உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி (67) புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கலின்போது, அவருடைய மகனும் கட்சியின் துணைத்தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர். இந்தத் தொகுதி யில் பாஜக சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள் ளார். ஆம் ஆத்மி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
முன்னதாக, சோனியா காந்தி டெல்லியிலிருந்து விமானம் மூலம் புர்சத்கஞ்ச் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலம் சென்ற அவருக்கு வழி நெடுகிலும் உள்ளூர் காங்கிரஸார் ரோஜா இதழ்களை தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார்.
ரே பரேலி கடந்த 1960-களிலி ருந்தே நேரு-காந்தி குடும்பத்தி னரின் தொகுதியாக விளங்குகிறது. இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்த தனது கணவர் பெரோஸ் காந்தி இறந்ததையடுத்து, 1967-ல் முதன்முறையாக இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தத் தொகுதியில் கடந்த 2004, 2006 (இடைத்தேர்தல்) 2008 என தொடர்ந்து 3-வது முறையாக எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த 1999-ல் அமேதி மற்றும் பெல்லாரி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.