Published : 03 Oct 2022 05:05 AM
Last Updated : 03 Oct 2022 05:05 AM

154-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 154-வதுபிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு நேற்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் காந்தி நினைவிடத்தில் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர்.பின்னர், பிரார்த்தனை, பஜனைப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காந்தி பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது ட்விட்டர் பதிவில், ‘‘நாம் அண்ணல் காந்தியின் பாதையில் பயணித்து, அமைதி, சமத்துவம் மற்றும் ஒற்றுமையை நமக்குள் உருவாக்க வேண்டும். அவரது போதனைகளை இளைஞர்கள் பின்பற்றி வாழவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெதீப் தன்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நவீன இந்தியாவின் எழுச்சியூட்டும் ஆளுமைகளில் ஒருவரான மகாத்மா காந்தி, இதுபோன்ற சவாலான தருணங்களில் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வழிகாட்டியாகவும், நம்பிக்கையாகவும் நீடிக்கிறார்.

உண்மையின் மீதான காந்தியின் நம்பிக்கையும், மனிதர்களிடம் நல்லுணர்வும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘‘காந்தி ஜெயந்தி தினத்தில், மகாத்மா காந்தியின் போதனைகளை நினைவுகூர்கிறேன். இந்த காந்தி ஜெயந்தி இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், நமதுநாடு `ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்' (சுதந்திரம் அடைந்து 75-வதுஆண்டு நிறைவு) விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. நாம் எப்போதும் பாபுஜியின் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்கி, அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அன்டோனியோ குத்தேரஸ் உள்ளிட்டோரும், காந்தி பிறந்த தினத்தையொட்டி ட்விட்டரில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x