Published : 02 Oct 2022 04:01 AM
Last Updated : 02 Oct 2022 04:01 AM

13 பெருநகரங்களில் 5-ஜி சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி - 2 ஆண்டுகளில் 90% பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்

டெல்லியில் நேற்று 5-ஜி சேவையைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. உடன், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் தேவுசின் சவுகான், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் பார்தி மிட்டல்.படம்: பிடிஐ

புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 13 பெருநகரங்களுக்கான 5-ஜி தொலைத்தொடர்பு சேவையை நேற்று டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவில் 1995-ல் செல்போன் சேவையும், இணைய சேவையும் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, 2-ஜி, 3-ஜி, 4-ஜி இணைய சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமாகின. இந்த வரிசையில் 5-ஜி தொலைத்தொடர்பு சேவையை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். மேலும், இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டையும் அவர் தொடங்கிவைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளை யும் அவர் பார்வையிட்டார்.

இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: புதிய இந்தியா, தொழில்நுட்பத்தின் நுகர்வோராக இருக்காது. தொழில்நுட்பங்களை உருவாக்கி, வெற்றிகரமாக அமல்படுத்தும் நாடாக இருக்கும். எதிர்காலத்தில் கம்பியில்லாத (வயர்லெஸ்) தொழில்நுட்பத்தை வடிவமைப்பதிலும், அது தொடர்பான உற்பத்தியிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்.

2-ஜி, 3-ஜி மற்றும் 4-ஜி தொழில்நுட்பங்களுக்காக மற்ற நாடுகளை இந்தியா சார்ந்திருந்தது. ஆனால், 5-ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய வரலாறு படைத்திருக்கிறது. முதல்முறையாக சர்வதேச தரத்தில் 5-ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளோம்.

டிஜிட்டல் இந்தியா என்பது சாதாரணத் திட்டமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டமாகும். தொழில்நுட்பத்தின் பலன்கள் எளிய மக்களைச் சென்றடைய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பொறுத்தவரை, மின்னணு சாதனத்தின் விலை, இணைப்புத் திட்டங்கள், தொலைத்தொடர்புக் கட்டணம், டிஜிட்டலுக்கு முதலிடம் ஆகிய 4 விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம்.

சுயசார்பு இந்தியா திட்டம் தொடங்கப்பட்டபோது, சிலர் எதிர்மறையாக விமர்சனம் செய்தனர். அந்த திட்டத்தின் கீழ் தற்போது குறைந்த விலையில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் 2 செல்போன் தயாரிப்பு ஆலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 200 ஆலைகள் செயல்படுகின்றன.

2014-ல் இந்தியாவின் செல்போன் ஏற்றுமதி பூஜ்ஜியமாக இருந்தது. இப்போது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றுமதி செய்கிறோம்.

2014-ல் இந்தியாவின் இணையசேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 6 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை இப்போது 80 கோடியாக உயர்ந்துள்ளது. 1.7 லட்சம் ஊராட்சிகள் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே இந்தியாவில்தான் இணையசேவைக் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு ஜிபியின் விலை ரூ.300-ல் இருந்து ரூ.10-ஆக குறைந்திருக்கிறது.

முதல் 3 தொழிற்புரட்சிகளால் இந்தியா பயனடை யாமல் இருந்திருக்கலாம். ஆனால் 4-வது தொழிற்புரட்சியின் முழுப் பலனையும் இந்தியா பெறும். இந்த தொழிற்புரட்சியை இந்தியாவே முன்னின்று வழி நடத்தும்.

5-ஜி சேவையால் இணையசேவையின் வேகம் அதிகரிக் கும். அதுமட்டுமன்றி, மக்களின் வாழ்க்கை முழுமை யாக மாறும்.

இந்திய குறு, சிறு நிறுவனங்கள், மின்னணுச் சாதனங்கள், உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

கார் ஓட்டிய பிரதமர்

இவ்விழாவில் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட பிரதமர், சுவீடனைச் சேர்ந்த எரிக்சன் நிறுவன அரங்குக்கு சென்றார். அங்கு, 5-ஜி தொழில்நுட்பத்தின் மூலம், டெல்லியில் இருந்தபடியே, சுவீடனின் உள்ள எரிக்சன் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை பிரதமர் ஓட்டினார்.

ஜியோ நிறுவன அரங்குக்கு பிரதமர் சென்றபோது, முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, ஜியோ 5-ஜி தொழில்நுட்ப சேவை குறித்து விளக்கினார்.

விழாவில், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுடன் 5-ஜி தொழில்நுட்பத்தில் காணொலி மூலம் பிரதமர் கலந்துரையாடினார்.

மேலும், டெல்லி மெட்ரோ திட்ட கட்டுமானத் தொழிலாளர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி கலந் துரையாடினார்.

200 நகரங்களில்...

விழாவில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது, “அடுத்த 6 மாதங்களில், 200 நகரங்களில் 5-ஜி சேவை அறிமுகமாகும். அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் 90 சதவீத பகுதிகளுக்கு 5-ஜி சேவை விரிவுபடுத்தப்படும். பிஎஸ்என்எல் சார்பில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி 5-ஜி சேவை தொடங்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x