

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்ட மேற்கொண்ட நடவடிக் கைகளை நிறுத்திவைக்க கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சிகள் கார ணமாக சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்ட கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் முடியும் வரையிலும் அல்லது தமிழக அரசின் இசைவைப் பெறும் வரையிலும் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அட்டப்பாடி பாசனத் திட்டத்துக்காக கேரள அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடந்த 2012 ஜூனில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து அன்றைய பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்திலும், காவிரி நடுவர் மன்றத்திலும் நிலுவையில் உள்ளன. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்படும் வரையிலோ அல்லது நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரையிலோ எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும். கேரள அரசின் அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய நீர் வளக் குழுமம் எந்தவொரு தொழில்நுட்ப அனுமதியும் வழங்கக் கூடாது’ என வலியுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன.
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 92-வது கூட்டம் கடந்த மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற்றது. அதில், அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்கான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேரள அரசு கேட்டுக் கொண்டது. தமிழக அரசின் கருத்து பெறப்பட்ட பிறகே இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் நடைபெற்ற வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 96-வது கூட்டத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு செய்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற்ற வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு முரணாக இந்த பரிந்துரை அமைந்தது.
தமிழக அரசின் கருத்தைப் பெறாமல் வல்லுநர் மதிப்பீட்டுக் குழு அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்ட் 27-ல் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு வல்லுநர் மதிப்பீட்டுக் குழு அளித்த பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இத்தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், நீர் ஆதார அமைச்சகங்களுக்கு அறிவுரை வழங்கும்படி பிரத மருக்கு முதல்வர் கடிதம் அனுப் பினார்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்திவைக்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.