Published : 01 Oct 2022 09:34 PM
Last Updated : 01 Oct 2022 09:34 PM

கேரளா | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மரணம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், முன்னாள் கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன், அதற்காக கடந்த சில மாதங்களாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது 68. கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கொடியேரி, கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான மார்க்சிஸ்ட் பொலிட்பீரோவில் உறுப்பினராக இருந்தார். 2006-2011 ஆண்டுகால மார்க்சிஸ்ட் அரசில் விஎஸ் அச்சுதானந்தன் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக கொடியேரி பதவி வகித்தார். அதேபோல், 2001-2004 மற்றும் 2011-2016ல் கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் இருந்த அனுபவம் அவருக்கு உண்டு.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கொச்சியில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் மாநில மாநாட்டில், தொடர்ந்து மூன்றாவது முறையாக கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்றாலும், உடல்நலக்குறைவு காரணமாக தற்காலிகமாக பொறுப்பில் இருந்து விலகி, சிகிச்சை பெற்றுவந்தார். 1982, 1987, 2001, 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் தலச்சேரி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சையில் இருந்தார். சென்னையில் இதற்கான சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இதையடுத்து, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் நாளை சென்னை வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x