அனைத்துத் தரப்பு மக்களையும் திரைப்படங்கள் இணைக்கின்றன - தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் குடியரசுத் தலைவர் பேச்சு

டெல்லியில் நேற்று நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை தமிழகத்தைச் சேர்ந்த சூர்யாவுக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
டெல்லியில் நேற்று நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை தமிழகத்தைச் சேர்ந்த சூர்யாவுக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லியில் நேற்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் சூர்யா, அஜய் தேவ்கன் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

கடந்த 2020-ம் ஆண்டுக்கான, 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகர்களாக இந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும், சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த திரைக்கதை (ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கரா) ஆகிய பிரிவுகளில் 'சூரரைப் போற்று' படம் விருதுகளை வென்றது.

வசந்த் இயக்கிய 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்த லட்சுமிப் பிரியா சந்திரமவுலி, சிறந்த துணை நடிகைக்கான விருதையும், இதே படத்துக்காக சிறந்த எடிட்டிங் பிரிவுக்கான விருதை ஸ்ரீகர் பிரசாத்தும் பெற்றனர். 'மண்டேலா' இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு அறிமுக இயக்குநர், சிறந்த வசனகர்த்தா என 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த இந்தி படமாக துள்சிதாஸ் ஜூனியர், கன்னடப் படமாக டோலு, மலையாளப் படமாக ‘திங்களச்ச நிச்சயம்’ உட்பட பல்வேறு விருதுகளும் அறிவிக்கப்பட்டன. சிறந்த இயக்குநராக சச்சி (அய்யப்பனும் கோஷியும்- மலையாளம்), துணை நடிகராக பிஜூ மேனன் (அய்யப்பனும் கோஷியும்) ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். நடிகர் சூர்யா, ‘சூரரைப் போற்று’ படத்தைத் தயாரித்த ஜோதிகா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார். பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு (79), 2020-ம் ஆண்டுக்கான `தாதா சாகேப் பால்கே' விருது சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அவருக்கும் இவ்விழாவில் விருது வழங்கப்பட்டது.

விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசும்போது, "நாட்டின் ஒரு பகுதியில் தயாரிக்கப்படும் திரைப்படம், மற்ற பகுதிகளிலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களையும் திரைப்படங்கள் இணைக்கின்றன" என்றார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பேசும்போது, “கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், திரையுலகப் பிரபலங்களின் பங்களிப்பை மறக்க முடியாது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. தேசிய திரைப்பட விழாவில் இந்த பன்முகத்தன்மையை நன்கு உணர முடிகிறது" என்றார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், துறைச் செயலர் அபூர்வா சந்திரா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

வேட்டியுடன் வந்த சூர்யா

இந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகர் சூர்யா வேட்டி, சட்டையும், அவரது மனைவி ஜோதிகா பாரம்பரிய முறையில் சேலையும் அணிந்திருந்தனர். சூர்யா விருது பெற்றபோது, ஜோதிகா செல்போனில் படமெடுத்தார். இதேபோல, ஜோதிகா விருது பெற்றதை சூர்யா செல்போனில் பதிவு செய்தார். அவர்களது மகள், மகன் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். குடும்பத்துடன் அவர்கள் வெளியிட்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலா கப் பரவிவருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in