Published : 01 Oct 2022 02:56 AM
Last Updated : 01 Oct 2022 02:56 AM

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் முதல் அரசு வேலை - பிஹாரின் ஒரு கிராமமே கொண்டாடும் இளைஞன்

பிஹார்: பிஹார் மாநில கிராமம் ஒன்றில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்ததை அந்த கிராமமே ஒன்றாக கொண்டாடிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்துபிறகு அந்த கிராமத்தில் இருந்து அரசு வேலைக்கு தேர்வாகியுள்ள முதல் நபர் அவர் என்பதாலேயே கிராமமே சேர்ந்து கொண்டாடுவதன் பின்னணி.

பிஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹாக்பூர் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ராகேஷ் தான் 75 ஆண்டுகளில் முதல் நபராக அரசு வேலைக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். 25 வயதாகும் ராகேஷ், தனது 19 வயதிலேயே தந்தையை இழந்துள்ளார். என்றாலும், அதன்பின் தனது பள்ளிக்கல்வியை கொண்டு, குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து அந்த வருமானத்தை கொண்டு தனது கல்வியை தொடர்ந்திருக்கிறார். அப்போது அரசு வேலையில் சேர வேண்டும் என லட்சியம் வகுத்துக்கொண்டு அதற்காக உழைக்கத் தொடங்கியுள்ளார் ராகேஷ்.

இத்தனை வருட கடின உழைப்புக்கு பலனாக, ராகேஷ் இப்போது ஆசிரியராகி உள்ளார். தனது சொந்த மாவட்டத்திலேயே அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக தேர்வாகி உள்ளார். இதையடுத்தே அவரின் கிராம மக்கள் இந்த தருணத்தை திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். 2000க்கும் அதிகமானோர் வசிக்கும் அந்த கிராம மக்களிடத்தில் அரசு வேலை என்பது தங்களின் தகுதிக்கு மிகுதியானது என்ற எண்ணம் மேலோங்கி இருந்துவருகிறது. அந்த எண்ணத்தை உடைத்து அரசு வேலைக்கு தேர்வாகி அசத்தியுள்ளார் ராகேஷ். அவரை கொண்டாடி கிராமம் முழுவதும் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு வேலை கிடைத்தது குறித்து பேசிய ராகேஷ், "கடந்த 75 ஆண்டுகளில் எனது கிராமத்தில் ஒருவர்கூட அரசு வேலையில் சேரவில்லை. அதை உடைத்து மாற்ற வேண்டும் என நினைத்தேன். அதன்படி, ஆர்வத்துடன் முயற்சித்தேன். இப்போது அந்த கனவு நிறைவேறி உள்ளது" என்று மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். ராகேஷின் இந்த சாதனை வருங்காலத்தில் அவர்களின் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு உந்துதலாக அமையட்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x