

ஜன் தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள், தங்கள் கணக்கில் இருந்து ஒரு மாதத்துக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்கமுடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பின் 2 முக்கிய அம்சங்கள்:
1. ஜன் தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்கமுடியும்.
2. கேஒய்சி இல்லாத (அதாவது வாடிக்கையாளர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படாத கணக்குகள்) அல்லது டெபாசிட் தொகையை எடுப்பதில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஜன் தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ரூ.5000 மட்டுமே எடுக்க முடியும்.
எதற்காக இந்த கெடுபிடி?
கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக்க ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்து வருவதாக பரவலாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மூலம் கறுப்பை வெள்ளையாக்கும் முயற்சிகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையால் அப்பாவி கிராம மக்கள் தவறானவர்களிடம் சிக்கி பினாமி சொத்து பரிவர்த்தனை மற்றும் பணமோசடி சட்ட நடவடிக்கைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.