Published : 30 Sep 2022 05:36 AM
Last Updated : 30 Sep 2022 05:36 AM

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் விலகல் - சசி தரூர், திக் விஜய் சிங் இடையே போட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தேர்தலில் போட்டியிடுகிறார். கடைசி நாளான இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங்கும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். டெல்லியில் நேற்று அவர் கூறும்போது, “வெள்ளிக்கிழமை முறைப்படி மனு தாக்கல் செய்வேன்" என்றார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூரை, திக்விஜய் சிங் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இதுகுறித்து சசி தரூர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் எதிரிகள் கிடையாது. தலைவர் பதவிக்கு நட்புரீதியான போட்டி நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

திக்விஜய் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “சசி தரூரின் கருத்தை ஆமோதிக்கிறேன். நாங்கள் மதவாத சக்திகளுக்கு எதிராக போரிடுகிறோம். காந்தி, நேருவின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அசோக் கெலாட் விலகல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பகிரங்கமாக அறிவித்துள்ளார். மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், தலைவர் பதவியை விரும்பவில்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்குமார் பன்சால் ஏற்கெனவே வேட்புமனுவை பெற்றுள்ளார். அவர் தனக்காக வேட்புமனுவை பெற்றாரா, வேறு யாருக்காவது வேட்புமனுவை பெற்றாரா என்பது தெரியவில்லை.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், சுஷில்குமார் ஷிண்டே, முகுல் வாஸ்னிக், குமாரி செல்ஜா உள்ளிட்டோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கான போட்டியில் அடிபடுகின்றன. கடைசி நாளில் அவர்கள் மனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 1-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று அன்றைய தினம் வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதியாக வரும் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 9,000 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அந்தந்த மாநில தலைமை அலுவலகங்களில் அக்டோபர் 17-ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x