Last Updated : 18 Nov, 2016 06:30 PM

 

Published : 18 Nov 2016 06:30 PM
Last Updated : 18 Nov 2016 06:30 PM

மக்களவையில் அமளிக்கு இடையே நாளிதழில் மூழ்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் முன் நின்று நீண்ட நேரம் கோஷமிட்டனர். அப்போது, முதல் வரிசையில் வந்து அமர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா அமைதியாக நாளிதழ் படித்தது பலரது கவனத்தை ஈர்த்தது.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவரான எச்.டி.தேவகவுடா, கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி.யாக உள்ளார். நேற்று மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும் திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, அதிமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் சபாநாயகர் முன் சூழ்ந்தபடி நின்று கோஷமிட்டனர். ரூபாய் நோட்டுகள் வாபஸ் பிரச்சினையைசபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் எழுப்பினர். இவர்களின் கோஷத்திற்கு இடையே கேள்வி நேரமும் நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது சற்று தாமதமாக அவையில் நுழைந்த தேவகவுடா தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். இதற்கு முன், அவரை வணங்கிய காங்கிரஸ் மூத்த உறுப்பினர் கமல்நாத்தின் தோளில் கைபோட்டு தோழமை காட்டினார். பிறகு அவரது இருக்கைக்கு நெருக்கமாக நின்று எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதை அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

சிறிதுநேரத்தில் ஓர் ஆங்கில நாளிதழை கையில் எடுத்தவர் 10 நிமிடங்களுக்கும் மேலாக அதில் மூழ்கினார். இவருக்கு அடுத்த இருக்கையில் இருந்த அதிமுக அவைத் தலைவர் பி.வேணுகோபாலும் எழுந்து ரூபாய் நோட்டு விவாதத்திற்கு கோரிக்கை விடுத்தபடி இருந்தார். தேவகவுடா மக்களவையில் நாளிதழ் படித்துக்கொண்டிருந்தது, மேலே காலரியில் இருந்த நிருபர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

மக்களவையில் சபாநாயகருக்கு இடதுபுறம் உள்ள முன்வரிசை இருக்கையின் ஒரு ஓரத்தில் கவுடாவிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவரது அருகில் வேணுகோபால், அடுத்தபடியாக சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்யாதவிற்கும் இருக்கை உள்ளது. தேவகவுடாவின் கட்சிக்கு மக்களவையில் இரண்டு உறுப்பினர்களும், மாநிலங்களவையில் ஓர் உறுப்பினரும்உள்ளனர். ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் இவரது கட்சி,எதிர்கட்சியினரின் போராட்டத்தில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x