Published : 29 Sep 2022 05:16 PM
Last Updated : 29 Sep 2022 05:16 PM
புதுடெல்லி: திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் என வேறுபடுத்தாமல் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்புக்கு பாகுபாடு காட்டுவது 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
கணவராக இருந்தாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்பட வேண்டும். இரு வயதுவந்த நபர்கள் ஒருமித்த கருத்துடன் உறவு கொண்டு எதிர்பாராமல், திட்டமிடாமல் கர்ப்பம் தரிக்க நேர்ந்தால், அந்தக் கரு 20 முதல் 24 வாரங்கள் வளர்ச்சியைத் தாண்டுவதற்குள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உலகம் இன்று பாதுகாப்பான கருக்கலைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கும் வேளையில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
24 வயது பெண் தொடர்ந்த வழக்கு: 24 வயது பெண் ஒருவர், தனது கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போப்பண்ணா, பி.வி.நாக்ரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "கருக்கலைப்புக்கு திருமணம் ஆனவர், திருமண ஆகாதவர் என்று பிரித்துப் பார்த்தல் மருத்துவ ரீதியாகவும், அரசியல் சாசன உரிமை ரீதியாகவும் ஏற்புடையது அல்ல. திருமணம் ஆன பெண்கள் மட்டும்தான் உறவில் ஈடுபடுகிறார்கள் என்பதில்லை. இது ஒருவகை கருத்தாக்கத்தை திணிக்கிறது. வயது வந்த இருவர். விரும்பி உறவு கொண்டு அதன் மூலம் கரு உருவாகி அதை வேண்டாம் என அவர்கள் நினைக்கும் வேளையில் கருக்கலைப்பு செய்யும் முழு உரிமையையும் திருமணமான பெண்ணுக்கு தருவதுபோல் தர வேண்டும்.
அதேபோல், பாலியல் வன்கொடுமை என்பது திருமண பந்தத்துக்குள் இருக்கும் வன்கொடுமையையும் சேர்ந்தது தான். எந்த வகையில் பலவந்தப்படுத்தி கருவுறச் செய்தாலும் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும். கருவை சுமப்பதோ, இல்லை அதைக் கலைப்பதோ ஒரு பெண்ணின் உடல் சார்ந்த சுயாதீன முடிவு. இதற்காக அந்தப் பெண் யாரிடமும் அனுமதி கோரத் தேவையில்லை. சட்டம் ஒரு குறுகிய ஆணாதிக்க பார்வையோடு கருக்கலைப்பு செய்யத் தகுதியானவர்களை தீர்மானித்துவிட முடியாது" என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT