

திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அவருடைய யாத்திரை 19-ஆம் நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், யாத்திரையின்போது அவரைப் பார்த்து துள்ளிக் குதித்து உணர்ச்சிவசப்பட்ட இளம் பெண்ணை அவர் ஆசுவாசப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆயிரம் மைல் நடக்கலாம்: தமிழ்நாட்டில் அவர் யாத்திரை மேற்கொண்டபோது நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சில பெண்கள் ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டு மணமகள் கொண்டு வருகிறோம் என்று சொல்லி அவரை வெட்கத்தில் புன்னகைக்க வைத்தனர். இப்போது கேரளாவில் யாத்திரை மேற்கொண்டுள்ள அவரை நெகிழச் செய்துள்ளார் இளம்பெண் ஒருவர். ராகுல் காந்தி நடைபயணத்தில் இணைந்து கொண்ட அவர், ராகுலைப் பார்த்து புன்னகைக்க அதை அவர் அங்கீகரிக்கிறார். கூடவே நடக்க அனுமதிக்கிறார். அதை அந்தப் பெண் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார் போல, அதனால் அந்தப் பெண் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரை உதிர்க்கிறார். துள்ளிக் குதித்து மான் போல் குதிக்கிறார். அந்தப் பெண்ணை அன்புடன் அரவணைத்து தேற்றுகிறார் ராகுல்.
அதேபோல் இன்னொரு பெண் குழந்தை ராகுலைப் பார்த்து வியந்து நிற்க அக்குழந்தையை அவர் ஏந்திக்கொள்ள அந்தக் குழந்தையும் ஆர்ச்சரியத்தில் கண்கள் அகல பார்க்கிறது. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஃபோட்டோவை பகிர்ந்து இது போன்ற மகிழ்ச்சியான தருணத்திற்காக எத்தனை ஆயிரம் மைல்கள் வேண்டுமானாலும் நடக்கலாம் எனப் பதிவிட்டிருக்கிறார்.