

மத்திய அரசின் நடவடிக்கையால் வீட்டுமனை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை குறையும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.பிரபுவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நேற்று கரூர் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்தியில் அமைந்துள்ளதுபோல ஒளிவு மறைவற்ற அரசு நிர்வாகம் மாநிலங்களிலும் நடைபெற வேண்டும்.
பாஜகவால் மட்டுமே தமிழகத்துக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க இயலும். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிகளும் ஊழல் நிறைந்தவை. இதற்கு மாற்றாக, தூய்மையான ஆட்சியை தர பாஜகவால்தான் முடியும்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, கறுப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிக்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வீட்டுமனை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை குறையும். அரசின் வருமானம் அதிகரிக்கும்.
தமிழகத்தில், திமுக, அதிமுக அரசுகள் மாறிமாறி 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், காவிரி பிரச்சினையைத் தீர்க்கவில்லை. பாஜக தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வந்தால், காவிரி பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்போம். திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அக்கட்சித் தலைவர்களின் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் உள்ளவை.
இது வியாதிப்போல ஜம்மு காஷ்மீர் முதல் தமிழகம் வரை பரவியுள்ளது என்றார்.