Published : 28 Sep 2022 04:49 AM
Last Updated : 28 Sep 2022 04:49 AM

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் - வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் சசி தரூர்

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வரும் 30-ம் தேதி சசி தரூர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. வரும் 30-ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் ஏற்கெனவே பெற்றுச் சென்றார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால், ‘ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கட்சி கொள்கை அடிப்படையில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதையடுத்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதுதொடர்பாக கருத்துகளை கேட்பதற்காக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் சச்சின் பைலட் முதல்வராவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 82 பேர் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர். மேலும் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததோடு, சச்சின் பைலட்டை முதல்வராக்க கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் மல்லிகார்ஜுன கார்கே, மாநில பொறுப்பாளர் அஜய் மக்கான் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எம்எல்ஏக்களின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் அசோக் கெலாட் இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

ராஜஸ்தான் நிலவரத்தால் கட்சித் தலைவர் சோனியாவும் அதிருப்தி அடைந்துள்ளார். இதற்கிடையே ராஜஸ்தான் மாநில அரசியல் குழப்பத்திற்கு நான் காரணம் இல்லை எனவும், எம்எல்ஏக்கள் எனது பேச்சை கேட்கவில்லை எனவும் மேலிட பார்வையாளர்களிடம் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

கெலாட் போட்டி இல்லை

இந்நிலையில் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிட மாட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய் சிங் உள்ளிட்டோர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதுதொடர்பான உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்று கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

2 பேருக்கு வேட்பு மனு

தேர்தல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இன்று கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவரது வாக்காளர் அடையாள அட்டையைக் கொடுத்தேன்.

காங்கிரஸ் பொருளாளரும் மூத்த தலைவருமான பவன் குமார் பன்சால் வேட்பு மனுவை வாங்கிச் சென்றுள்ளார். அவர் யாருக்காக வாங்கிச் சென்றார் என்பது தெரியவில்லை.

அதைப் போல எம்.பி. சசி தரூர் சார்பில் வேறு ஒருவர் மனுவை வாங்கிச் சென்றுள்ளார். சசி தரூர் வரும் 30-ம் தேதி காலை மனு தாக்கல் செய்யப் போவதாக தகவல் வந்துள்ளது. இவ்வாறு மதுசூதன் மிஸ்திரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x