Last Updated : 25 Jul, 2014 08:06 AM

 

Published : 25 Jul 2014 08:06 AM
Last Updated : 25 Jul 2014 08:06 AM

110 கி.மீ. வேக ரயிலை நிறுத்தினால் 871மீ. தூரம் போய்தான் நிற்கும்: ‘ஹாரன்’ சத்தம் கேட்டாலே, ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்கக்கூடாது

24 பெட்டிகளுடன் 110 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ரயிலை திடீரென நிறுத்தினாலும் 871 மீட்டர் தூரம் போய்த்தான் நிற்கும். ஆளில்லா லெவல் கிரா சிங்கை கடக்கும்போது ரயிலைப் பார்த்தாலோ, ‘ஹாரன்’ சத்தம் கேட்டாலோ கடக்கக்கூடாது என எச்சரிக்கிறது ரயில் இன்ஜின் டிரைவர்கள் சங்கம்.

நாடு முழுவதும் 33 ஆயிரம் லெவல் கிராசிங்குகள் உள்ளன. இவற்றில், ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மட்டும் 14,896.

ஒருபுறம் இவற்றை ஆட்கள் இருக்கும் லெவல் கிராசிங்குகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஐதராபாத் அருகே வியாழக் கிழமை ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பஸ் மீது ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

“ஒரேயொரு நிமிடம் பஸ் டிரைவர் பொறுமையாக இருந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது” என்கிறார் அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளர்கள் கழகத்தின் சென்னை கோட்ட செயல் தலைவர் வி.பாலச்சந்திரன். அவர் மேலும் கூறியதாவது:

ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்கும்போது, ரயில் வருவதைப் பார்த்தாலோ அல்லது ரயிலின் ‘ஹாரன்’ சத்தம் கேட்டாலோ லெவல் கிராசிங்கை கடந்து போகவே கூடாது. ரயிலின் வேகத்தை மக்களே மதிப்பிடக்கூடாது.

ஆளில்லா லெவல் கிராசிங்கை நடந்து கடப்பவர்கள் பதற்றத்தில் தண்டவாளத்தில் இடறி விழுந்தாலோ, மோட்டார் சைக்கிளில் கடக்கும்போது வாகனம் நடுவழியில் நின்றுவிட்டாலோ சில வினாடிகளில் உயிரைவிட நேரிடும்.

பகல் நேரங்களில் நாம் தண்டவாளத்தைக் கடப்பதை ரயில் இன்ஜின் டிரைவர்தான் பார்க் கிறாரே, ரயிலை நிறுத்திவிடுவார் அல்லது ரயிலின் வேகத்தைக் குறைத்துவிடுவார் என்று நினைத்து ஆளில்லா லெவல் கிராசிங்கை கடப்பது பெரும் தவறு.

24 பெட்டிகளுடன் 110 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ரயிலை இன்ஜின் டிரைவரே நினைத்தாலும் திடீரென நிறுத்த முடியாது. அப்படியே நிறுத்தினால் 871 மீட்டர் தூரம் போய்த்தான் ரயில் நிற்கும். பொதுவாக ஆளில்லா லெவல் கிராசிங் இருப்பது குறித்த அறிவிப்பு பலகை அந்த இடத்தில் இருந்து 700 மீட்டர் தூரத்துக்கு முன்னாலேயே வைக்கப்பட்டிருக்கும்.

அதைப் பார்த்ததும் ரயில் இன்ஜின் டிரைவர்கள் பலமாக ‘ஹாரன்’ அடிக்கத் தொடங்கி விடுவர். ஆளில்லா லெவல் கிராசிங்கை ரயில் கடக்கும் வரை தொடர்ந்து ‘ஹாரன்’ அடிப்பார்கள். நினைத்தவுடன், நினைத்த மாத்திரத்தில் ரயிலை நிறுத்த முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x