Published : 27 Sep 2022 11:35 AM
Last Updated : 27 Sep 2022 11:35 AM

போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல இந்தியா: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றபோதிலும், போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் கங்கரா மாவட்டத்தில் உள்ள பதோலி என்ற இடத்தில் பணியின்போது உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை:

இந்திய ராணுவத்தின் வலிமையை உலகம் மதிப்புடன் பார்க்கிறது. எனவே, ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்காகவும் குரல் கொடுக்கும் தகுதி கொண்ட ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. வலிமையான ராணுவத்தைக் கொண்டுள்ள போதிலும் நாம் எந்த ஒரு நாட்டையும் தாக்கியது கிடையாது. எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தையும் அபகரித்தது கிடையாது. அதேநேரத்தில், இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு யாராவது ஊறுவிளைவித்தால் உரிய பதிலடி கொடுப்போம்.

இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆனால், இதனை தவறாக எடுத்துக்கொண்டு இந்தியா கோழை நாடு என்றோ போருக்கு அஞ்சும் நாடு என்றோ யாரும் எண்ணிவிட முடியாது. உலகத்தோடு சேர்ந்து இந்தியாவும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டபோது சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் ஏற்பட்டது. அப்போது, நமது வீரர்கள் வெளிப்படுத்திய துணிவு, எத்தகைய சூழலிலும் இந்தியா தலைவணங்காது என்பதை உலகிற்கு உணர்த்தியது.

2016ல் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019ல் பாகிஸ்தானின் பாலாகோட்டில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகியவை, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்தியது. தீவிரவாதத்தின் வேரை வெட்டி எறிவதற்கான இந்தியாவின் உறுதியை உலகத்திற்குக் காட்டியது. தேவை எனில், நாட்டிற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் சென்று தாக்குதல் தொடுக்கக்கூடிய வலிமை பொருந்திய வீரர்களை நமது ராணுவம் கொண்டிருக்கிறது. இந்தியா குறித்த பிம்பம் மாறி இருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது.

நாட்டிற்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நமது நாடு போற்றுகிறது. அவர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது.

நமது ராணுவம், நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்கிறது. ஒழுக்கம், கடமை, தேசப்பற்று, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக நமது ராணுவம் திகழ்கிறது. ராணுவத்தில் ஒருவரது பின்னணியோ, மதமோ முக்கியமல்ல. நமது நாட்டின் மூர்வணக் கொடி உயரே பறக்க வேண்டும் என்பதே முக்கியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x