Published : 27 Sep 2022 05:46 AM
Last Updated : 27 Sep 2022 05:46 AM

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம் - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் காணிக்கை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலால், பிரம்மோற்சவ விழா, மாட வீதிகளில் வாகன சேவைகள் நடத்தாமல் கோயிலுக்குள் மட்டுமே பக்தர்கள் இன்றி வாகன சேவையுடன் நடத்தப்பட்டது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த பிரம்மாண்ட விழாவினை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இம்முறை கோலாகலமாக நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று மாலை தங்க கொடி மரத்தில் கருடன் சின்னம் கொடி ஏற்றப்பட்டு, பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது.

ஆந்திர அரசு சார்பில், மாநில முதல்வர் ஜெகன்மோகன், தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து காணிக்கையாக வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து இரவு முதல் வாகன சேவையாக பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் திருமாட வீதிகளில் பவனி வர உள்ளார்.

தினமும், காலையிலும், இரவிலும் வாகன சேவைகள், தேர் திருவிழா, தங்க தேரோட்டம் போன்றவை நடைபெற்று, இறுதியாக அக்டோபர் மாதம் 5-ம் தேதி அதிகாலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.

இதில், 5-ம் நாளான அக்டோபர் மாதம் 1-ம் தேதி இரவு பிரசித்திபெற்ற கருட வாகன சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதற்கேற்ப ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். கருட சேவையையொட்டி, செப்டம்பர் 30-ம் தேதி மதியம் 2 மணி முதல் திருப்பதியில் இருந்து திருமலைக் குபைக்குகள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவம் நடை பெறும் 9 நாட்களும் அனைத்து சிறப்பு தரிசனங்களையும், ஆர்ஜித சேவை தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஆதலால், சர்வ தரிசன முறையில் மட்டுமே சாமானிய பக்தர்கள் வசதியாக சுவாமியை தரிசிக்கும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ விழாவுக்காக பாதுகாப்பும் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று திருமலையில் தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் கூறியதாவது:

பிரம்மோற்சவ விழாவுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலிபிரி சோதனைச் சாவடி, ஏழுமலையான் கோயில் மற்றும் மாட வீதிகளில் துல்லியமாக சோதனை நடத்தப்படும். ஏற்கெனவே 2,200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இம்முறைகூடுதலாக 1,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். கருட சேவைக்கு கூடுதலாக 1,256 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் இது புரட்டாசி மாதம் என்பதால் தமிழக பக்தர்கள் அதிகம் திருமலைக்கு வருவர். இது எங்களுக்கு சவாலான நேரமாக கருதுகிறோம்.

ஒருபுறம் பிரம்மோற்சவம் மறுபுறம் புரட்டாசி மாத கூட்டம். மாட வீதிகளில் சாதாரணமாக 1.25 லட்சம் பக்தர்கள் மட்டுமே அமர்ந்து வாகன சேவையில் பங்கேற்கலாம். ஆனால், வாகன சேவையை கண்ட பக்தர்களை உடனுக்குடன் வெளியேற்றுவதன் மூலம் கூடுதலாக ஒரு லட்சம் பக்தர்கள் வாகன சேவையை கண்டுகளிக்கலாம்.

பிளாஸ்டிக் பொருட்கள் திருமலையில் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக ஸ்டீல் அல்லது செப்பு பாட்டில்களை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு நரசிம்ம கிஷோர் கூறினார்.

தினமும் 5 லட்சம் லட்டு

தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறும்போது, “வாகன சேவையின் போது தயவு செய்து பக்தர்கள் யாரும் வாகனங்கள் மீது சில்லறை காசுகளை வீச வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பிரம்மோற்சவத்தில் லட்டு பிரசாதங்கள் தட்டுப்பாடு இன்றி வழங்க, தினமும் 5 லட்சம் லட்டுகள் நிலுவையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x