Published : 27 Sep 2022 05:12 AM
Last Updated : 27 Sep 2022 05:12 AM

உள்நாட்டு தேவைக்கும், ஏற்றுமதிக்கும் தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிப்பு - பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: ‘‘உள்நாட்டு பாதுகாப்பு தேவையை நிறைவு செய்யவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிக்கப்படும்’’ என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய பாதுகாப்புப் படைக்கு தேவையான, விமானங்கள், கப்பல்கள், ஆயுதங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி, அதிநவீன தேஜாஸ் விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வளர்ந்த நாடுகளிடம் உள்ள போர் விமானங்களுக்கு நிகராக தேஜாஸ் போர் விமானங்கள் இருப்பதும் பல நாடுகளை கவர்ந்துள்ளது. அதற்காக மலேசியா உட்பட பல நாடுகள் தேஜாஸ் விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அத்துடன் சில நாடுகள் ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் டெல்லியில் நேற்று கூறியதாவது:

தேஜாஸ் போர் விமானங்களுக்கு கிடைத்த ஆர்டர்களின்படி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அவற்றை விநியோகம் செய்வதில் தாமதம் என்பதெல்லாம் முடிந்து போன விஷயம். உள்நாட்டு பாது காப்புத் தேவைகளை பூர்த்தி செய்யவும், ஆர்டர்களின்படி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

தற்போது ஒரு இன்ஜின் கொண்ட தேஜாஸ் போர் விமானங்களை வாங்க மலேசியா ஆர்டர் வழங்கியுள்ளது. சீனாவின் ஜேஎப்-17, கொரியாவின் எப்ஏ-50, ரஷ்யாவின் மிக்-35 மற்றும் யாக்-13- ஜெட் விமானங்களின் கடும் போட்டிகளுக்கு இடையில் தேஜாஸ் விமானத்தை வாங்க மலேசியா முன்வந்துள்ளது.

இந்த விமானம் 2 பேர் பயணிக்ககூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தேஜாஸ் விமானங்கள் வாங்குவது குறித்து அர்ஜென்டினா, எகிப்து, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்), ஆண்டுக்கு 8 தேஜாஸ் விமானங்களை தயாரித்து வருகிறது. தற்போது அதன் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

24 விமானம் தயாரிக்க முடியும்

எனவே, இனிமேல் கூடுதலாக தேஜாஸ் விமானங்கள் தயாரிக்கப்படும். ஆண்டுக்கு 16 தேஜாஸ் விமானங்களை தயாரிக்கும் வகையில் உற்பத்தி திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்திய விமானப்படைக்கும் வெளிநாட்டு ஆர்டர்களுக்கு ஏற்ப, ஆண்டுக்கு 24 தேஜாஸ் விமானங்களை தயாரிக்கவும் முடியும். தேஜாஸ் போர் விமானங்கள் விலையும் மற்ற நாடுகளை விட குறைவுதான். ஆனால், அதன் செயல்திறன் மேம்பட்டவை. இவ்வாறு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x