

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியில் உலகிலேயே 2-வது இடத்தில் இந்தியா இருப்பதாக குளோபல் வெல்த் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
அதாவது இந்தியாவின் மொத்த செல்வத்தில் 60% சொத்துகள் 1% மக்களிடத்திலேயே உள்ளது என்று இந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் சுய்சி ஆய்வு நிறுவனம் தொகுத்துக் கொடுத்த இந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருக்கப்பட்டதாவது, உலகின் அரைபங்கு சொத்துகளை 0.7% மக்களே வைத்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் ரஷ்யா முதலிடம் வகிக்கிறது. இந்நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் 74.5% சொத்துகளை 1% மக்களே வைத்துள்ளனர்.
தாய்லாந்தின் 58% சொத்துகள், பிரேசிலின் 47.9% சொத்துகள், சீனாவின் 43.8% சொத்துகள் 1% மக்களிடமே உள்ளன. சுவிட்சர்லாந்துதான் உலகின் அதிசெல்வந்த நாடாக விளங்குவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
உலக சொத்துகளில் 89% சொத்துகளை 10% மக்கள் வைத்துள்ளனர், கீழ்நிலையில் உள்ளவர்களிடம், உலக சொத்துகளில் 1% சொத்துகள் மட்டுமே அனைவரிடமும் சேர்த்து உள்ளது.
அறிக்கையில் மேலும் கூறும்போது, “எங்கள் கணக்கிடுதல்களின் படி உலக செல்வப் பரவலில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் 80% மேலே கூறிய கீழ்நிலையில் உள்ளவர்கள்” என்கிறது இந்த அறிக்கை.
பெரிய அளவில் அதிவேக வளர்ச்சி, மற்றும் மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும் போது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இந்த வித்தியாசம் கூட ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது என்கிறது இந்த அறிக்கை.
இந்தியாவில் தனிப்பட்ட சொத்துகளில் அசையா மற்றும் பிற உண்மையான சொத்துகள் ஆதிக்கம் செலுத்துகிறது. இது 86% வரை உள்ளது.
இந்தியாவில் செல்வமும் சொத்துகள் சேர்ப்பும் அதிகரித்து வந்தாலும் இந்த வளர்ச்சியை அனைவரும் பங்கீடு செய்து கொள்வதில்லை.
இந்தியாவின் வயது வந்தோர் மக்கள் தொகையில் 96 சதவீதத்தினர் 10,000 டாலர்களுக்கும் கீழ்தான் சொத்து வைத்துள்ளனர். சீனாவில் 68 சதவீதத்தினர் இந்த சொத்து அளவு நிலையில் உள்ளனர்.
இவ்வாறு கூறுகிறது குளோபல் வெல்த் அறிக்கை.