

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற ராகுல் காந்தி, டெல்லி துணை முதல்வர், எம்எல்ஏ உட்பட பலரை போலீஸார் கைது செய்தனர்.
ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதற்காக ரூ.5,500 கோடி முதல் தவணையாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். எனினும், இத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஹரியாணாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷண் கிரிவால் விஷம் குடித்தார். அவரை உடனடியாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் ராம் கிஷண் இறந்தார்.
இந்நிலையில், ராம் கிஷணின் குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏவும் கட்சி செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அவர்களை போலீஸார் கைது செய்து நாடாளுமன்ற வீதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அதேபோல் சிறிது நேரத்தில் அங்கு வந்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்எல்ஏ சுரீந்தர் சிங் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு போலீஸார் எடுக்கும் நடவடிக்கை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை’’ என்றார். பாஜக செய்தித் தொடர்பாளர் நலின் கோஹ்லி கூறும்போது, ‘‘தற்கொலையை வைத்து அரசியல் செய்ய ராகுல் நினைக்கிறார். எல்லாவற்றுக்கும் நேரம், காலம், இடம் உள்ளது” என்று கண்டனம் தெரிவித்தார்.