இந்திய விரோத செயல்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்: பாகிஸ்தானுக்கு அருண் ஜேட்லி எச்சரிக்கை

இந்திய விரோத செயல்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்: பாகிஸ்தானுக்கு அருண் ஜேட்லி எச்சரிக்கை
Updated on
1 min read

இந்தியாவை தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டிருந்தால் அதற்கு பாகிஸ்தான் மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தாக்குதல் நடத்தி அழித்த பிறகு, எல்லையில் பாகிஸ்தான் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நேற்று நடத்திய தாக்குதலில் அப்பாவில் மக்கள் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அருண் ஜேட்லி கூறியதாவது:

இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி பாகிஸ்தான் காயப்படுத்தி வருவதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது. இதற்கு பாகிஸ்தான் மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். 2003-ம் ஆண்டு ஏற்பட்ட “எல்லைப் பகுதி சண்டை நிறுத்த உடன்பாட்டை’ பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது. இளைஞர்களுக்கு தீவிரவாதப் பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து வருகிறது. சண்டை நிறுத்த உடன்பாடு தற்போது அதிகாரப்பூர்வமாக மீறப்படுகிறது.

பாகிஸ்தான் ஏற்றுமதி செய்யும் தீவிரவாத செயல்களுக்கு பொறுமையாக இருந்து இந்தியா அனுபவித்த துயரம் ஏராளம். இதற்கு எதிராக தூதரக அளவிலான முயற்சிகளையே எடுத்துக் கொண்டிருந்தோம். எல்லை தாண்டிய தீவிரவாத பிரச்சினையை கையாள்வதில் இந்தியாவின் அணுகுமுறை இனி வேறாக இருக்கும். இதில் இந்திய அரசின் கொள்கை தெளிவானது.

உரி மற்றும் பதான்கோட்டில் நாம் ஒரு விலை கொடுத்தோம். ஆனால் இது ஒரு தரப்பானது. இப்போது பாகிஸ்தான் கொடுக்கப்போகும் விலை அதனால் தாங்கமுடியாத சுமையாக இருக்கும். பாகிஸ்தான் அரசு, ஜனநாயகம், அரசு- ராணுவ உறவுகள் என அனைத்தையும் ஆட்டம் காணவைக்கும்.

இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in