Published : 25 Sep 2022 04:45 AM
Last Updated : 25 Sep 2022 04:45 AM

‘ஜி-23’ தலைவர்கள் நினைத்தது நடந்தது - காங். தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு படிவம் வாங்கினார் சசி தரூர்

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேற்று வேட்புமனு தாக்கல் நடவடிக்கை தொடங்கியது. தேர்தலில் போட்டியிட சசி தரூர் எம்.பி. வேட்பு மனு படிவத்தைப் பெற்றுக் கொண்டார். அசோக் கெலாட் விரைவில் மனு தாக்கல் செய்வதாக கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகிய பிறகு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தி கட்சிப் பொறுப்பேற்றார். அதன் பிறகு நடைபெற்ற மாநில தேர்தல்கள் மற்றும் 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை, ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் சந்தித்தும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்தி விலகினார். தற்காலிக தலைவராக சோனியா மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், கட்சிக்குள் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உட்பட 23 தலைவர்கள் சோனியாவுக்குக் கடிதம் எழுதினர். எனினும், கட்சியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், தலைவர் பதவியை ஏற்க ராகுல் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் தலைவராக மதுசூதன் மிஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. வரும் 30-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதேபோல் கட்சி எம்.பி. சசி தரூர் தேர்தலில் போட்டியிட நேற்று வேட்பு மனு படிவத்தைப் பெற்றுள்ளார். மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் இருந்து, சசி தரூரின் பிரதிநிதி ஒருவர் வேட்பு மனு படிவங்களை வாங்கி சென்றதாக தகவல்கள் வெளியாயின. இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள முதல் நபராக சசி தரூர் இருக்கிறார். மேலும், மூத்த தலைவர் மணீஷ் திவாரியும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த முறை காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சித் தலைவர் பொறுப்புக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்றுமுன்தினம் கூறும்போது, ‘‘கட்சிதலைவர் பதவியை ஏற்கும்படி ராகுலிடம் பல முறை பேசிவிட்டோம். அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், சோனியா காந்தியிடம் ஆலோசனை நடத்திய போது, தலைவர் தேர்தலில் தான் நடுநிலை வகிக்கபோவதாக அவர் கூறிவிட்டார். எனவே, இந்த முறை கட்சி தலைவர் தேர்தலில் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. இந்தச் சூழ்நிலையில், நான் போட்டியிடுவது உறுதி. விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்வேன்’’ என்றார்.

இந்த முறை சோனியா, ராகுல் விலகியதால் கட்சித் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க முடியவில்லை. எனவே, அக்டோபர் மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அன்றைய தினமே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

‘ஜி-23’ தலைவர்கள் நினைத்தது நடந்தது

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் மாநில காங்கிரஸ் மூத்த உறுப்பினருமான பிருத்விராஜ் சவான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸில் உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். கட்சிக்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டும் என்றுதான் சோனியா காந்திக்கு நான் உட்பட ‘ஜி-23’ தலைவர்கள் கடிதம் எழுதினோம். இப்போது கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் நினைத்தது நடந்துள்ளது. எனவே, ‘ஜி-23’ முடிந்து போன விஷயம். ஆனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் கட்சித் தலைவர் பகுதி நேரமாக இல்லாமல், முழு நேர தலைவராக இருக்க வேண்டும். தேர்தல் ஜனநாயக நடைமுறையில் சிக்கல்கள் எழுந்தால், நாங்கள் குரல் கொடுப்போம். கட்சித் தலைவரை சோனியா காந்தி தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது ராகுல் காந்தியே தலைமை பதவியேற்க வேண்டும் என்று மாநில காங்கிரஸார் கூறுகின்றனர். அதை ஏன் சொல்ல வேண்டும்? அதற்குப் பதில் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலை வலுப்படுத்த வேண்டும்.

ராகுல் காந்தி இப்போது போட்டியிட விரும்பினால் கூட நாங்கள் வரவேற்போம். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். நாங்கள் காந்தி குடும்பத்துக்கு எதிரானவர்கள் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x