Published : 24 Sep 2022 05:34 PM
Last Updated : 24 Sep 2022 05:34 PM

வேட்புமனு படிவம் பெற்று காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்த சசி தரூர்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு படிவத்தை சசி தரூர் பெற்றதை அடுத்து, அவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல் காந்தி மறுத்ததை அடுத்து, தான் போட்டியிடப் போவதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான அஷோக் கெலாட் அறிவித்துள்ளார். வேட்புமனு என்றைக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை பிறகு அறிவிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது தொடர்பாக மற்றொரு மூத்த தலைவரான சசி தரூரும் சோனியா காந்தியை சந்தித்து தெரிவித்தார். மேலும், தேர்தலை நடத்தும் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்த்ரியைச் சந்தித்து, தேர்தல் விதிமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனிடையே, தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும், இதற்கு சோனியா காந்தியிடமோ, ராகுல் காந்தியிடமோ அனுமதி பெறத் தேவையில்லை என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், மணிஷ் திவாரி ஆகியோரும் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளது.

இந்நிலையில், தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்யும் நோக்கில் முதல் நபராக சசி தரூர் வேட்பு மனு படிவத்தைப் பெற்றுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வசமே இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் பதவி, தற்போது காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் வசம் செல்ல இருக்கிறது. அவர் யார் என்பது வாக்கு எண்ணம் நாளான அக்டோபர் 19ம் தேதி தெரிந்துவிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x