Published : 24 Sep 2022 10:48 AM
Last Updated : 24 Sep 2022 10:48 AM

கட்சித் தலைவர் என்பவர்... - காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பாக ஜி23 தலைவர்கள் விதித்த நிபந்தனை

பிரித்வி ராஜ் சவான் | கோப்புப்படம்

புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் பகுதி நேரத் தலைவராக இருக்கக் கூடாது. அவர் எந்த நேரமும் மக்களைச் சந்திக்க கூடிய ஒருவராக இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஜி23 தலைவர்களில் ஒருவரான பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் பற்றியும், புதிய தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் காங்கிரஸ் கட்சியின் ஜி23 தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும், கட்சிக்கு முழுநேர தலைவர் வேண்டும் என்று ஜி23 தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தோம். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது என்றே நான் நினைக்கிறேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் தலைவர் பகுதி நேரம் மட்டும் செயல்படுபவராக இல்லாமல், எந்த நேரத்திலும் மக்களை சந்திப்பவராக இருக்க வேண்டும்.

ஜனநாயக நடைமுறையில் ஏதாவது சிக்கல் இருந்தால் நாங்கள் குரல் கொடுப்போம். சில மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. ஏன் அவ்வாறு கோரிக்கை விடுக்க வேண்டும். அதற்கு பதிலாக உள்கட்சி தேர்தல் நடைமுறைகளை பலப்படுத்த வேண்டும்.

இன்றும் ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு போட்டியிட நினைத்து மனுதாக்கல் செய்தால் அதனை நாங்கள் வரவேற்போம். தான் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால் அவர் தங்களை அவமதிப்பதாக சிலர் ஏன் நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

ஜி23 காந்தி குடும்பத்திற்கு எதிரான அமைப்பு இல்லை, அது முட்டாள் தனமானதும் கூட. காங்ரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் யாரும் உள்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும், முழுநேரமும் தொண்டர்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். சோனியா காந்தி எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அசோக் கெலாட் மிகச்சிறந்த ஒரு மூத்த தலைவர். கட்சித் தேர்தலில் அவருக்கு ஆதரவு தரவேண்டுமா இல்லையா என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. அவர் இரண்டு பதவி கொள்கையை வலியுறுத்துவார் என்றால் நாங்கள் அதனை எதிர்ப்போம். காங்கிரஸ் தலைவர் பதவியும், மாநில முதல்வர் பதவியும் பகுதி நேர வேலையா?

அவர் இரண்டு மூன்று மாதங்கள் மட்டும் தலைவர் பதவியில் இருந்து விட்டு, பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்று தோன்றுகிறது. ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து திரும்பி வந்ததும் காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு அவரைத் தவிர தலைவர் பதவிக்கு வேறு தேர்வு இருக்காது. ஆனால் தற்போது அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இறுதி முடிவும் எடுக்கப்பட்டுவிட்டது.

எங்களுக்கு ஜி23 என்ற பெயரை நீங்கள் தான் அளித்தீர்கள். நாங்கள் ஒரு ரகசிய கடிதத்தை ( 2020ம் ஆண்டு சோனியா காந்திக்கு ஜி23 தலைவர்கள் எழுதியது) எழுதினோம். அது வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் எங்களின் கோரிக்கை ஏற்பட்டுள்ளது. இத்துடன் எங்கள் பணி நிறைவிடைந்து விட்டது என்று நினைக்கிறேன். நாங்கள் யாருக்கும் போட்டி குழு கிடையாது". இவ்வாறு பிரித்விராஜ் சவான் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான உள்கட்சி தேர்லுக்கான வேட்புமனுதாக்கல் இன்று (செப்.24) தொடங்குகிறது.

இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடப்போவதாக அறவித்துள்ள நிலையில், அவரை எதிர்த்து ஜி 23 தலைவர்களில் ஒருவரான சசிதரூர் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. மற்றொரு ஜி 23 தலைவரான மணிஷ் திவாரியும் தலைவர் பதிவிக்கு போட்டியிட விரும்புதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x