Published : 24 Sep 2022 06:27 AM
Last Updated : 24 Sep 2022 06:27 AM

பசுமை வளர்ச்சி, வேலைவாய்ப்பில்தான் தற்போது இந்தியாவின் கவனம் உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘பசுமை வளர்ச்சி, பசுமை வேலைவாய்ப்பை உருவாக்குவதில்தான் தற்போது இந்தியாவின் கவனம் உள்ளது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டை தொடங்கி வைத்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மாநிலங்களுக்குள்ளான வட்டாரப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அனைத்து சுற்றுச்சூழல் அமைச்சர் களும் முடிந்தவரையில் முயற்சி கள் மேற்கொள்ள வேண்டும். பசுமை வளர்ச்சி, பசுமை வேலை வாய்ப்புகளை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பிரச்சாரத்தை நாம் வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும். சுற்றுச் சூழல் அமைச்சகங்களின் செயல்பாடு கட்டுப்படுத்தப்பட்ட வரையறைக்குள் இருக்கக் கூடாது.

இந்த அமைச்சகத்தின் பங்கு என்பது கட்டுப்பாட்டாளர் என்பதை விட சுற்றுச்சூழலை ஊக்கு விக்குவிப்பவராகவே இருக்க வேண்டும். பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை, எத்தனால் கலந்த பயோஎரிபொருள் கொள்கைகளை மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்வது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அடிப்படையானதாக அமையும்.

ஆரோக்கியமான போட்டி

இதுபோன்ற திட்டங்களை ஊக்குவிப்பது மாநிலங்களுக்கிடையில் ஒத்துழைப்பாகவும், ஆரோக்கியமான போட்டியாகவும் மாற வேண்டும். 2070-க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்யமாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் இலக்கு. இந்த இலக்கை அடைவதில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

காடுகள் அதிகரிப்பு

நமது காடுகளின் பரப்பளவு அதிகரித்து உள்ளதுடன், ஈர நிலங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன. கிர் காடுகளில் உள்ள சிங்கங்கள், புலிகள், யானைகள், காண்டாமிருகங்கள் போன்ற மிருகங்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் மீண்டும் நமீபிய சிறுத்தைகளின் வரவு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது, இந்திய விலங்குகளின் பன்முகத் தன்மையை உறுதி செய்யவும், காடுகளின் சுற்றுச்சூழல் புத்துயிர் பெறவும் உதவும்.

காட்டுத் தீ

தண்ணீர் அதிகம் உள்ள மாநிலங் களும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. எனவே, நீர் மேலாண்மையில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேற்கத்திய நாடுகளில் காட்டுத் தீ மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நம்நாட்டில் அதன் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் பாதுகாப்பு நடை முறைகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வனக் காவலர்களுக்கு இதுகுறித்த சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x