

சபரிமலையில் அனைத்து ஏடிஎம் களிலும் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என கேரள மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து ஐயப்பனைத் தரிசித்தனர். அடுத்து வரும் நாட்களிலும், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கம் போல அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திருவிதாங் கூர் தேவஸ்வம் போர்டும், மாநில அரசும் பல்வேறு விரிவான ஏற் பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் காலாவதியாகி இருப்பதால், நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்துள்ளது. ஏடிஎம் மையங்களும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர் கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாமல் திண்டாடும் அவலம் ஏற்படும். எனவே மண்டல கால சீசனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தேவஸ்வம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் கூறும்போது, ‘‘சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்குச் சிரமமின்றி ஏடிஎம்களில் பணம் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். பம்பா மற்றும் சன்னிதானத்தில் ஏராளமான ஏடிஎம்கள் உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஏடிஎம்களை பயன்படுத்துவதால் வெகு விரைவிலேயே பணம் தீர்ந்து விடுகிறது. எனவே சபரிமலையில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் எப்போதும் பணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.
பம்பா முதல் சன்னிதானம் வரையிலான மலைப்பாதையில் பக்தர்களுக்கு இலவச குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ மையங்களும் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்தார்.