Published : 23 Sep 2022 05:24 AM
Last Updated : 23 Sep 2022 05:24 AM

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | கார்கே, திவாரி உட்பட முக்கிய தலைவர்களும் போட்டியிட திட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் போட்டியிட இறுதியாக மறுத்துவிட்டால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் போட்டியில் குதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான மனுத் தாக்கல் நாளை முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கும். ஓட்டுகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதில் ராகுல் போட்டியிடுவாரா, இல்லையா என்ற நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. அவர் போட்டியிடாவிட்டால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், தேர்தலில் குதிக்கலாம் என்று தெரிகிறது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, கட்சி தலைவர் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக, அசோக் கெலாட்டிடம் சோனியா தெரிவித்துள்ளார். இதே பதிலைத்தான் அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பிய எம்.பி. சசிதரூரிடமும் கூறியுள்ளார்.

கட்சி தலைவர் தேர்தலில் மனீஷ் திவாரி, மல்லிகார்ஜூன கார்கேவும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் நான் ஏன் போட்டியிட கூடாது என்று திக் விஜய் சிங்கும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று கூறுகையில், ‘‘தேர்தலில் ராகுல் போட்டியிடுவார் என நான் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளேன். ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்க கொச்சிக்கு வெள்ளிக்கிழமை செல்கிறேன். ராகுலை தேர்தலில் போட்டியிட வைக்க கடைசி முயற்சி மேற்கொள்வேன். அவர் போட்டியிடவில்லை என்றால், கட்சியின் உத்தரவை பெற்று நான் மனுத்தாக்கல் செய்வேன்” என்றார்.

முன்பு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல், பெயரளவில் நடைமுறைக்காக நடந்தது. ஆனால் இந்த முறை உண்மையான போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது. அசோக் கெலாட், சசிதரூர் ஆகியோர் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதனன் மிஸ்திரியை சந்தித்து தேர்தல் முறைகள் குறித்து விசாரித்தனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றால், ராஜஸ்தான் முதல்வராக இருப்பீர்களா என அசோக் கெலாட்டிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘இரு பதவிகளிலும் இருப்பதால் எனக்கு பிரச்சினை எதுவும் இல்லை. எந்த பதவியும் இல்லை என்றாலும் கவலையில்லை. ராகுலுடன் சேர்ந்து மக்களை திரட்டி, பாஜக கொள்கைகளுக்கு எதிராக போராடுவேன்’’ என அவர் கூறினார்.

கெலாட்டுக்கு சிக்கல்

ராஜஸ்தான் முதல்வர் பதவி, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இரண்டிலும் இருக்க அசோக் கெலாட் விரும்புவது குறித்து ராகுலிடம் கேட்டபோது, ‘‘ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறையை ஆதரிப்பேன்’’ என தெரிவித்துள்ளார். இந்த சீர்திருத்த முடிவுதான் ராஜஸ்தான் உதய்பூரில் நடந்த 3 நாள் காங்கிரஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

ராகுலின் இந்த பதில் அசோக்கெலாட்டுக்கு தருமசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட் கொண்டுவரப்படுவார் என அவர் அஞ்சுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x