

ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசுக்கும் எதிர்க்கட்சியினருக் கும் இடையே மோதல் போக்கு நிலவியபோதிலும், மாநிலங் களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி கைகுலுக்கி பேசினார்.
மாநிலங்களவையில் நேற்று காலையில் ரூபாய் நோட்டு விவ காரம் குறித்து விவாதம் நடை பெற்றது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக தாக்கிப் பேசினார்.
இந்நிலையில், உணவு இடை வேளையின்போது, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் எதிர்க்கட்சியினர் அமர்ந்துள்ள பகுதிக்குச் சென்றனர். அப்போது மோடி, மன்மோகன் சிங்குடன் கைகுலுக்கி சிறிது நேரம் பேசினார்.
பின்னர் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர் களுடனும் மோடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
மோடிக்கு அவமதிப்பு நோட்டீஸ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்த அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் பிரதமர் அதில் பங்கேற்காததால் அவை முடங்கின.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) பிரதமர் அவைக்கு வந்தார். சிறிது நேரம் கழித்து அவர் சென்றுவிட்டார். பின்னர் அவைக்கு வரவில்லை. நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் இருந்தபோதிலும் விவாதத்தில் பங்கேற்று பதில் அளிக்கவில்லை. எனவே, அவருக்கு எதிராக மாநிலங்களவை செயலாளர் மற்றும் அவைத் தலைவரிடம் அவமதிப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளேன்” என்றார்.
மக்களவையில் பிரதமருக்கு எதிராக அவமதிப்பு நோட்டீஸ் வழங்குவது குறித்து பரிசீலிப்ப தாக மார்க்சிஸ்ட் எம்பி முகமது சலிம் தெரிவித்தார்.