Published : 23 Jul 2014 09:55 AM
Last Updated : 23 Jul 2014 09:55 AM

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தான் ராணுவம் 19 முறை தாக்குதல்: மாநிலங்களவையில் அமைச்சர் ஜேட்லி தகவல்

நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் 19 முறை தாக்குதல் நடத்தியதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப் பட்டது.

‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துணிவற்றது, பலவீனமானது’ என்று பிரதமர் பதவிக்கு வரும் முன் மோடி கூறிவந்தார். இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கேட்டதற்கு பதில் அளித்து பேசும்போது பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி இதைத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: பாகிஸ்தா னின் அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துவருகிறது. நமது தலை குனிய இடம் தர மாட்டோம். ஜூலை 16ம் தேதி வரையில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 54 தடவை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. மே 26 முதல் ஜூலை 17 வரையில் 19 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

சண்டை நிறுத்த ஒப்பந்த மீறல் சம்பவங்கள் பற்றி பாகிஸ்தானின் உயர் அதிகாரிகள் நிலையில் எழுப்பி பேசுகிறோம். இதற்காக தனி தொலைத் தொடர்பு வசதி, கொடி அமர்வுக் கூட்ட வசதி ஆகியவை உள்ளன.

மே 27ம் தேதி டெல்லி வந் திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி சண்டை நிறுத்த உத்தரவை மீறாமல் இருக்கும்படி வற்புறுத்தினார்.

எல்லையில் அமைதி நிலவுவது அவசியம் என்பதையும் நவாஸிடம் பிரதமர் வலியுறுத்தினார்.

எல்லைக்கு அப்பாலிருந்து ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் நிகழ் வது தொழில்நுட்பத்தின் உதவியா லும் போதிய படைகளை நிறுத்தி இருப்பதன் மூலமும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரு தரப்பு உறவு மேம்பட இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் நிலையில் சந்தித்துப் பேசுவது எனவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இவ்வாறு ஜேட்லி தெரிவித் தார்.

எல்லையில் ராணுவ வீரர் பலி

எல்லைக்கு அப்பாலிருந்து ஜம்மு மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை காலையில் இந்த ஊடுருவல் முயற்சி நடந்தது என பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எம்.மேத்தா தெரிவித்தார்.

அக்னூர் தாலுகாவில் உள்ள பலான்வாலா பகுதியில் உள்ள சாக்லா சாவடி அருகே இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவினர். அப்போது அவர்களை விரட்டி அடிக்க நாகா படைப்பிரிவு வீரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x