Published : 22 Sep 2022 03:35 PM
Last Updated : 22 Sep 2022 03:35 PM

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | மும்முனைப் போட்டிக்கு வழிவகுக்கிறாரா திக்விஜய் சிங்?

திக்விஜய் சிங் | கோப்புப்படம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் ஆகியோர் முடிவு செய்துள்ள நிலையில், இந்தப் போட்டியில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கும் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 8 என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஒருவர் மட்டுமே தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் வாக்குப்பதிவு இன்றி ஒருமனதாக தலைவர் தேர்வு செய்யப்படுவார். எனினும், அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி இருக்க வேண்டும் என்றும், கட்சியின் ஜனநாயக அணுகுமுறைக்கு அதுதான் உகந்தது என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டி இருப்பதற்கு அஷோக் கெலாட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள சசி தரூர், அஷோக் கெலாட் இருவரும் தற்போதைய கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இந்நிலையில், திக்விஜய் சிங்கும் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நீங்கள் சசி தரூரை ஆதரிப்பீர்களா அல்லது அஷோக் கெலாட்டை ஆதரிப்பீர்களா என்று திக்விஜய் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஏன், நான் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாதா?” என பதில் கேள்வி கேட்டு பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கினார்.

திக்விஜய் சிங் போட்டியிடுவது உறுதியாகும்பட்சத்தில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் மும்முனை போட்டி கொண்டதாக இருக்கும். தலைவர் பதவிக்கு இருவர் போட்டியிட்டால், வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டில் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களது பெயரை குறிப்பிட்டு வாக்களிப்பார்கள். ஒருவேளை 3 பேர் போட்டியிட்டால், வாக்காளர்கள் தலைவர் பதவிக்கான தங்களின் முதல் தேர்வு, இரண்டாவது தேர்வு, 3-வது தேர்வு யார் என்பதை தெரிவிக்கும் வகையில் வாக்குப் பதிவு செய்வார்கள். தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தலில், நாட்டின் தென்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சசி தரூரும், வட பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அஷோக் கெலாட்டும் போட்டியிட உள்ள நிலையில், மத்திய இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியவராக திக்விஜய் சிங் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x