“கடவுளுக்கு எங்களைப் பிடிக்கவில்லை எனில், நாங்கள் அம்பேத்கரை வணங்கிக் கொள்கிறோம்” - இது சோபம்மாவின் கதை

சோபம்மா வீட்டில் கடவுளாக வழங்கப்படும் அம்பேத்கர் புகைப்படம்
சோபம்மா வீட்டில் கடவுளாக வழங்கப்படும் அம்பேத்கர் புகைப்படம்
Updated on
2 min read

பெங்களூரு: “கடவுளுக்கு எங்களைப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் அம்பேத்கரை வணங்கிக் கொள்கிறோம்” என்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலினக் குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் உல்லேர்ஹல்லி மாவட்டத்தின் மலூர் தாலுகாவுக்கு உட்பட்டது கோலார் மாவட்டம். இது பெங்களூருவில் இருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்கு சோபம்மா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சோபம்மா பட்டியலினத்தவர் நலன் சார்ந்த ஓர் அமைப்பிடம் அண்மையில் அளித்தப் பேட்டியில், “கடவுளுக்கு எங்களைப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் அம்பேத்கரை வணங்கிக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். அவர் அவ்வாறு கூறியதற்கான காரணம்தான் சோபம்மாவின் புரட்சிக் கதையின் மையம்.

சோபம்மா அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் ரூ.60,000 அபராதம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். எதற்காகத் தெரியுமா? அவரது மகன் அங்குள்ள கோயிலில் உள்ள தெய்வத்தின் சிலையை தொட்டுவிட்டார் என்பதற்காக. இழந்த புனிதத்தை மீட்டெடுக்க ரூ.60,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று கிராமப் பஞ்சாயத்து தண்டனை விதித்துள்ளது.

இந்நிலையில், சோபம்மா அளித்த பேட்டியில் நடந்தவற்றை விவரித்துள்ளார். அவர் கூறியதிலிருந்து: “கடந்த 8-ஆம் தேதி ஊரில் பூத்தாயம்மா திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின்போது பட்டியலினத்தவர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், கோயிலுக்கு வெளியே நின்றிருந்த எனது 15 வயது மகன் சாமி ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எனது மகன் சித்திரானா சிலையுடன் இணைந்திருந்த தூண் ஒன்றை தொட்டுவிட்டார். இதைப் பார்த்து ஊர்க்காரர்கள் உடனே எங்கள் மகனுடன் நாங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஊர் சபையில் ஆஜராக உத்தரவிட்டனர். அடுத்த நாள் நாங்களும் அங்கு சென்றோம். ஆனால், எங்களுக்கு பேரிடிதான் காத்திருந்தது. அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் நாங்கள் ரூ.60,000 தண்டம் கட்ட வேண்டும்; இல்லாவிட்டால் ஊரை விட்டு வெளியே அனுப்பப்படுவோம் என்றனர்.

எங்கள் கிராமத்தில் 75 முதல் 80 குடும்பங்கள்தான் வசிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் ஒக்கலிகா சமூகத்தைச் சார்ந்தவை. 10 குடும்பங்கள் பட்டியலின குடும்பங்கள். எங்கள் வீடு ஊர்க் கடைசியில் இருக்கிறது. என் மகன் தெக்கால் கிராமத்தில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயில்கிறார். என் கணவர் ரமேஷ் உடல்நலன் சரியில்லாதவர். நான் மட்டும்தான் என் வீட்டில் சம்பாதிக்கும் நபர். தினமும் காலை 5.30 மணிக்கு நான் ரயில் ஏறி பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டுக்கு செல்வேன். அங்கு சில வீடுகளில் வீட்டு வேலை செய்கிறேன். எனது மாத வருமானம் ரூ.13,000. இதில்தான் எனது குடும்பமே வாழ்கிறது. இதில் நான் எப்படி ரூ.60,000 தண்டம் கட்ட முடியும்?

கடவுளுக்கு எங்கள் ஸ்பரிசம் பிடிக்காது என்றால், இந்த ஊர் எங்களை ஒதுக்கியே வைக்க துடிக்கும் என்றால், நான் அந்தக் கடவுளை வணங்கி என்ன பயன்? மற்ற எல்லோரையும் போல், நானும் கோயிலுக்கு வரி செலுத்தியுள்ளேன். ஆனால் நான் கடவுளைக் கும்பிடக் கூடாது என்றால், இனி எப்போதும் அம்பேத்கரை மட்டுமே கும்பிடுவேன்” என்று அவர் கூறினார். இதுதான் சோபம்மாவின் கதை.

அம்பேத்கர் சேவா சமிதியின் செயற்பாட்டாளர் சந்தேஷ், அந்தக் குடும்பத்திற்கு இப்போது உதவிக் கரம் நீட்டி வருகிறார். இப்போது அந்தக் குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில்தான் இந்தச் சம்பவமும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in