Last Updated : 22 Sep, 2022 05:10 AM

 

Published : 22 Sep 2022 05:10 AM
Last Updated : 22 Sep 2022 05:10 AM

கர்நாடகா | காங்கிரஸ் போஸ்டர் பிரசாரத்தால் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி

பெங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மை படத்துடன் ஒட்டப்பட்டுள்ள ‘பே சிஎம்’ போஸ்டர்.

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர் சங்கத்தினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக குற்றம்சாட்டி, ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரத்தை முன் வைத்து கர்நாடக பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறி வருகிறது. கடந்த வாரம் 40 சதவீத கமிஷன் அரசு (40percentsarkara.com) என்ற பெயரில் இணையதளம் தொடங்கி பொதுமக்களிடம் புகார் மனுக்களை கோரியது. இதைத் தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ரேங்க் கார்டு வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் நேற்று பேடிஎம் ஸ்கேனர் போன்று 'பே சிஎம்' எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன் போஸ்டரை வெளியிட்டது. இதில் பசவராஜ் பொம்மையின் படம் கியூஆர் கோட் வடிவில் உள்ளது. இதனை செல்போனில் ஸ்கேன் செய்தால் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடங்கிய 40percentsarkara.com இணையதளத்துக்கு செல்கிறது.

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் முன்னெடுத்த இந்த நூதன பிரசாரத்தால் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூருவில் பொது இடங்களில் ஒட்டப்பட் டுள்ள போஸ்டர்களை கிழிக்குமாறு போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகை யில் ஆங்காங்கே போலீஸார் போஸ்டர்களை கிழிப்பதை காண முடிந்தது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜகவினர் இடையே நாள்தோறும் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x