

தர்மசாலா: மாநில சுற்றுலாத் துறை அமைச்சர்களின் 3 நாள் தேசிய மாநாடு பங்கேற்ற மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி பேசியதாவது:
நாட்டின் பெருமையை வெளி நாட்டவருக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுற்றுலா தலங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இந்திய தேசிய கொடியை கம்பீரமாக பறக்க செய்ய வேண்டும். இதைவிட இந்திய சுற்றுலாவுக்கான சிறந்த வர்த்தக முத்திரையாக (பிராண்ட்) வேறெதுவும் இருக்க முடியாது.
கரோனா காலகட்டத்துக்குப் பிறகு உலகளவில் சுற்றுலாத் துறை மீட்சியில் இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது. சுற்றுலாத் துறை மேம்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்கவும், வரும் ஆண்டுகளில் உலகளவில் அந்தத் துறையில் தலைமை இடத்துக்கு முன்னேறவும் மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
வரும் 2024-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் மூலம் 15,000 கோடி டாலர் (ரூ.12 லட்சம் கோடி) பங்களிப்பை வழங்க குறுகிய கால இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அந்நியச் செலாவணி மூலமான வருவாய் ஈட்டலில் 3,000 கோடி டாலர் (ரூ.2.40 லட்சம் கோடி) பங்களிப்பையும், 1.5 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதையும் இலக்காக கொண்டு சுற்றுலாத் துறை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.