Published : 22 Sep 2022 04:49 AM
Last Updated : 22 Sep 2022 04:49 AM

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதில் பாரபட்சம் காட்டவில்லை - மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடானது இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரம்பை மீறவில்லை. மேலும் இதில் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எஸ்சி, எஸ்டி, மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் கொண்டுவரப்பட்டது.

அரசு வேலைவாய்ப்புகளில் இதன்மூலம் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுபிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டம் இடஒதுக்கீட்டையே கேள்விகுறியாக்குவதாக உள்ளது என புகார்கள் எழுந்துள்ளன. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா எம். திரிவேதி, ஜே.பி.பர்திவாலா, எஸ்.ரவீந்தர் பட் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு வைத்த வாதத்தில், "இந்த இடஒதுக்கீடு என்பது ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளை இந்த இடஒதுக்கீடு கேள்விக்குள்ளாக்குகிறது” என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ரவீந்தர் பட் கூறும்போது, "இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் பொருளாதார ரீதியாக மக்கள் பின்னடைவு பெற்றுதான் இருக்கிறார்கள். வறுமை கோட்டுக்குக் கீழே பலர் உள்ளனர். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு கொடுக்க கூடாது?" என்றார்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறும்போது, “பொதுப் பிரிவிலிருந்து ஏழைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவதும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (இடபிள்யூஎஸ்) ஒதுக்கீட்டில் இருந்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி, எஸ்இபிசி பிரிவுகளை ஒதுக்குவதும் பாரபட்சமானது அல்ல. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீட்டை வழங்குவது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பான 50 சதவீத உச்சவரம்பை மீறுவதாக அமையாது.

இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பை பொருளாதாரரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடானது மீறவில்லை. மேலும் இதில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை" என்று வாதிட்டார்.

மேலும் `யூத் ஃபார் ஈக்குவாலிட்டி’ என்ற அமைப்பும் இதுதொடர்பான வழக்கைத் தொடர்ந்திருந்தது. அந்த அமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால்சங்கர நாராயணன் ஆஜராகி வாதிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x