Published : 26 Jul 2014 07:33 PM
Last Updated : 26 Jul 2014 07:33 PM

எல்லை அத்துமீறல்கள் பேச்சு வார்த்தைகளில் முக்கிய அங்கம் வகிக்கும்: ஜேட்லி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்கள் செய்வது இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை தடுக்காது என்றாலும் இந்த விவகாரம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் எல்லையில் சமாதான ஒப்பந்தத்தை 49 முறை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பாகிஸ்தான்.

கார்கில் போர் 15வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அருண் ஜேட்லி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்திய, பாகிஸ்தான் செயலர்கள் மட்டப்பேச்சு வார்த்தைகளில் பாகிஸ்தான் அத்துமீறல் இடம்பெறுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்தார் அருண் ஜேட்லி.

அத்துமீறலும் அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் என்றார் அருண் ஜேட்லி.

மேலும் ஜூலை 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஜேட்லி அறிக்கை வெளியிட்டபோது, எல்லையில் அமைதியும் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் புனிதத்தையும் காக்கவேண்டும் என்பதை பிரதமர் மோடி, நவாஸ் ஷெரீப்பிடம் வலியுறுத்தியதாக தெரிவித்திருந்தார்.

மேலும் ஜேட்லி தனிப்பட்டக் கருத்தாகக் கூறும்போது, தேசியப் போர் நினைவகம் ஒன்றை கட்டும் யோசனையும் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்காக டெல்லியில் உள்ள பிரின்சஸ் பார்க் பகுதியில் பொருத்தமான இடத்தைப் பார்த்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.

கார்கில் போரில் இந்திய ராணுவத்தினர் 527 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர், மேலும் 1363 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x