

பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக க்யூஆர் கோடு வடிவிலான அவரது புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகள் கவனம் ஈர்த்துள்ளன. அதில் PayCM எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அந்த மாநில காங்கிரஸ் கட்சி முன்னெடுத்திருக்கும் என நம்பப்படுகிறது.
பெங்களூரு நகரம் இந்தியாவின் சிலிக்கான் வேலி என போற்றப்படுகிறது. அதிக அளவிலான ஐடி நிறுவனங்கள் அந்த நகரில் இயங்கி வருவதே இதற்கு காரணம். இந்நிலையில், அதனை குறிப்பிடும் வகையில் நூதன முறையில் சுவரொட்டி ஒன்று அந்த நகரின் வீதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அது காண்போரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த மாநிலத்தில் முதல்வர் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அண்மையில் பெங்களூருவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு முறையாக செயல்படாத அரசு இயந்திரம் தான் பொறுப்பு என காங்கிரஸ் குற்றம் சுமத்தியது. அதோடு 40% கமிஷன் அரசு என்ற தளத்தையும் அந்த கட்சி கட்டமைத்தது. இந்த தளத்தின் ஊடாக பாஜக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை திரட்டி வருகிறது காங்கிரஸ்.
இந்நிலையில், பெங்களுருவில் PayCM சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் முதல்வரின் புகைப்படத்தை கொண்டுள்ள க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்தால் அது நேரடியாக 40% கமிஷன் அரசு தளத்திற்கு பயனர்களை கொண்டு செல்கிறது. அதனால் இந்த சுவரொட்டிகளை காங்கிரஸ் கட்சி ஒட்டி இருக்கலாம் என நம்பப்படுகிறது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் பொம்மை, ஹைதராபாத் சென்றிருந்தபோதும் இதே மாதிரியான சுவரொட்டிகள் அங்கு ஒட்டப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.