நகரங்களின் வளர்ச்சிக்காக செயல்படுங்கள் - பாஜக மேயர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

பாஜக மேயர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார். படம்: பிடிஐ
பாஜக மேயர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார். படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: தேர்தல் வெற்றியை கருத்தில் கொள்ள வேண்டாம். நகரங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி மட்டும் செயல்படுங்கள் என்று பாஜக மேயர், துணை மேயர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

பாஜகவை சேர்ந்த மேயர், துணை மேயர்களின் 2 நாள் மாநாடு குஜராத்தின் காந்திநகரில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:

சர்தார் வல்லபபாய் படேல் அகமதாபாத் நகர மேயராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவரது பதவிக் காலத்தில் அகமதாபாத் அபரிமிதமான வளர்ச்சி அடைந்தது. பின்னாளில் அவர் நாட்டின் துணைப் பிரதமராக உயர்ந்தார். நாட்டின் நகர்ப்புற உள்கட்டமைப்பில் பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் மெட்ரோ ரயில் சேவை 250 கி.மீட்டருக்கும் குறைவாக இருந்தது. இப்போது நாட்டின் மெட்ரோ ரயில் சேவை 775 கி. மீட்டருக்கும் அதிகமாக விரிவடைந்து இருக்கிறது.

‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் நகர்ப்புற திட்டமிடலுக்கு இந்த நகரங்கள் முன்னோடிகளாக இருக்கும். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1.25 கோடி வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. முதல் நிலை நகரங்கள் மற்றும் செயற்கைக்கோள் நகரங்களின் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. இரண்டாம் நிலை, 3-ம் நிலை நகரங்களை மேம்படுத்துவதிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

பாஜக மேயர்கள், துணை மேயர்கள் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு செயல்படக்கூடாது. ஆட்சி, அதிகாரம், பதவிக்காக நாம் அரசியலுக்கு வரவில்லை. நம்மை பொறுத்தவரை ஆட்சி, அதிகாரத்தை மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கிடைத்த பாக்கியமாக கருத வேண்டும். தேர்தல் வெற்றியை கருத்தில் கொள்ளாமல் நகரங்களின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு ஓர் உதாரணத்தை கூற விரும்புகிறேன். கடந்த 2005-ம் ஆண்டில் குஜராத்தில் நகர்ப்புற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான விதிகள் உருவாக்கப்பட்டன. இது தேர்தல் வெற்றியை கடுமையாகப் பாதிக்கும் என்று பலர் கூறினர். ஆனால் தேர்தலை குறித்து கவலைப்படாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த இயக்கத்தில் குஜராத் மக்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடங்கினர். நேர்மையான திட்டங்கள், கொள்கைகளுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு அளிக்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in