Published : 21 Sep 2022 06:25 AM
Last Updated : 21 Sep 2022 06:25 AM

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக் கோள்களை அக்.22-ல் செலுத்துகிறது இஸ்ரோ

சென்னை: இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் அக்.22-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அதிகபட்சம் 1,750 கிலோ வரை மட்டுமே செயற்கைக் கோள்களை செலுத்த முடியும். ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை செலுத்தலாம்.

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்துடன் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (New Space India Limited) நிறுவனம் 2 ராக்கெட் ஏவுதலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

முதல்கட்டமாக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக் கோள்கள் அக்டோபர் 22-ம் தேதி செலுத்தப்பட உள்ளன. இதற்காக ஒன்வெப் நிறுவன செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை ராக்கெட் பாகத்துடன் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

2-வது கட்டமாக, ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக் கோள் 2023 ஜன.23-ம் தேதி செலுத்தப்படும். அதற்கிடையே 3 பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதுதவிர, 10 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களின் உரிமை, என்எஸ்ஐஎல்-க்கு மாற்றப்பட உள்ளது. அவற்றின் சேவையை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x