

பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், '' பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி, ஏராளமானோர் உயிரிழந்த துன்பகரமான சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
ரூ.2 லட்சம் நிவாரணம்
விபத்தில் பலியானவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அமைச்சர் சுரேஷ் பிரபு உடன் பேசியுள்ளேன். அவர் நேரடியாக நிலைமையை கண்காணித்து வருகிறார் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.