டெல்லியில் காரில் கடத்தப்பட்ட ரூ. 3.6 கோடி பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்: ஆடிட்டர் உட்பட 3 பேர் கைது

டெல்லியில் காரில் கடத்தப்பட்ட ரூ. 3.6 கோடி பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்: ஆடிட்டர் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

டெல்லியில் இரவு நேரத்தில் ஹோண்டா சிட்டி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.6 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பணத்தை கொண்டு சென்ற நகை வியாபாரி மற்றும் ஆடிட்டர் உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோத வழிகளில் புதிய நோட்டுகளாக மாற்ற பெருந்தொகை காரில் கொண்டு செல்லப்படுவதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதில், கடந்த செவ்வாய் கிழமை இரவு வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த ஹோண்டா சிட்டி காரில் தடை செய்யப்பட்ட கரன்சி நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மதிப்பு ரூ.3.6 கோடி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காலாவதியான ரூபாய் நோட்டுகளை காரின் பின்பகுதியில் பதுக்கிவைத்து கொண்டு சென்ற மூவரிடமும் இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, முறையான பதில் அளிக்கவில்லை.

காஷ்மீரி கேட் போலீஸ் நிலையத்துக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று மேற்கொண்டுவிசாரித்ததில், அவர்களில் ஒருவர் நகை வியாபாரி என்றும், மற்றொருவர் ஆடிட்டர் என்றும் தெரியவந்தது. மூன்றாவது நபர், ஆடிட்டரின் உதவியாளர் என்றும் தெரிந்தது.

தீவிர விசாரணையில், இப்பெருந்தொகை முழுவதும் பல்வேறு தொழில்களின் மூலம் சட்டவிரோத வழிகளில் சேர்க்கப்பட்ட கறுப்புப் பணம் என்பதையும், காலாவதியான நோட்டுகளை புதியவையாக மாற்ற திட்டமிட்டிருந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மூவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்த போலீஸார், வருமான வரித் துறையினருக்கும் தகவல் தெரிவித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கமிஷன் பெற்றுக்கொண்டு பழைய நோட்டுகளை சட்டவிரோத வழிகளில் புதிய நோட்டுகளாக மாற்றித்தரும் நிழலுலக நெட்வொர்க்கின் அங்கமாக இவர்கள் இருக்கக்கூடும் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in