Published : 20 Sep 2022 03:43 PM
Last Updated : 20 Sep 2022 03:43 PM

“இது இந்தியா... ரஷ்யாவோ, சீனாவோ இல்லை” - கலாசாரம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

மோகன் பாகவத் | கோப்புப் படம்

புதுடெல்லி: “இந்தியா தனது வரலாற்று அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். பிற நாடுகளின் கலாசாரத்தை தழுவி உலக அரங்கில் கேலிக்குள்ளாகும் நிலையை எதிர்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

மகாபாரதத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ளுதல் - ‘Connecting with the Mahabharata’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய மோகன் பாகவத் பேசும்போது, "இந்திய வரலாற்றைப் பற்றி நாம் பெருமை கொள்ள வேண்டும். நமக்கென்று தனி அடையாளங்கள் உள்ளன. நாம் நமது கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டும். இந்தியா மீது படையெடுத்தவர்கள் இந்திய கலாசாரத்தை, வரலாற்றை சீர்குலைத்துவிட்டனர். இந்த வேளையில் அந்த கலாசாரத்தை, வரலாற்றை மீட்டெடுக்க வேண்டுமே தவிர, நாம் புதிதாக பிற கலாசாரங்களை உள்வாங்கிக் கொள்ளக் கூடாது.

நாம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா போல் இருக்க முடியாது. இந்தியாவின் வரலாற்றைக் கொண்டு நாம் நமது நிகழ்காலத்தை வடிவமைக்க வேண்டும். அது ஒரே நாளில் நடந்துவிடாது. ஒரே நாளில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துவிடாது. ஆகையால் மெதுவாக, நிதானமாக நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வரலாறு என்பது வெறும் புத்தகம் அல்ல. அது புவியியலும் மக்களும் சார்ந்தது. சில கிராமங்களுக்குச் சென்றால் அவர்கள் சீதா எங்கு குளித்தார். பீமன் எங்கு தனது அடையாளத்தை விட்டுச் சென்றார் என எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்வார்கள். அதுபோன்ற வரலாறுகளுடன் நாம் நம்மை தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் சாட்சிகளைத் தேட முடியாது. நாம் நமது வரலாற்றையே மறந்துவிட்டோம்.

நம் வரலாற்றினை உறுதிப்படுத்த எப்போதுமே கார்பன் டேட்டிங் போன்ற அறிவியல் ஆதாரங்களை நம்பி இருக்க முடியாது. சில நேரங்களில் கார்பன் டேட்டிங் கூட ஓரளவுக்கான கால கட்டத்தையே நிர்ணயிக்கக் கூடும். அதன் பின்னர் அது துல்லியமாக இருக்காது. ஆதலால் நம் வரலாற்றுக்கான சாட்சியங்களை நாம் நம் பாரம்பரியங்களில் இருந்து தேட வேண்டும்.

மகாபாரதத்தை கேள்விக்கு உள்ளாக்குவோர் மஹரிஷி வியாஸ் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று யோசித்தது உண்டா? அவர் எந்த ராஜ்ஜியத்தையும் குறிவைத்திருக்கவில்லையே. மகாபாரதத்தில் போர் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அது வாழ்க்கைக்கான பாடம். பாரதம் ஒரு தனி நபர் பற்றிய கதை அல்ல. மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ராமாயணம் இந்த உலகப் பயணத்தை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள உதவுகிறது" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x